"இருள் பூமி" புத்தக விமர்சனம்
புத்தகத்தின் பெயர் : இருள் பூமி
ஆசிரியர் : நிஜந்தன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
விலை : 140
பக்கம்: 136
நாம் அனைவரும் ஒரு இருள் பூமியை கடந்து தான் வருகிறோம்.சில பேர் அந்த இருள் பூமிக்குள்ளே இருந்துவிடலாம் என்று நினைத்து அங்கேயே இருந்துவிடுகிறார்கள்.
இதே போல் தான் இந்த நாவலிலும் ஒரு மனிதன் எத்தனை துயரங்கள்,ஆசைகள்,அதிகாரங்கள்,பணம்,பதவி,மதம் உள்ளிட்டவற்றிற்கு நடுவில் எப்படி வாழ்கிறான்,அவன் உயிர்வாழ என்னவெல்லாம் செய்கிறான் என்பதை நோக்கியே இந்த நாவல் நகர்கிறது..
நாவலில்ல முக்கிய கதாப்பாத்திரமாக விஜயன் திகழ்கிறான்.ஒரு கட்டிட இடிபாட்டில் சிக்கிக்கொண்டு அவன் வாழ்வு முழுக்க நடந்த இன்பம்,துன்பம்,துரோகம்,காதல்,போன்ற அனைத்தையும் அவன் நினைத்து பார்க்கிறான்.
அந்த நினைவுகளில் நிறைய மறக்கமுடியாத விசயங்களை அவன் மறக்கிறான்,செய்ய முடியாத காரியங்களை தான் செய்ததாக அவன் கற்பனை செய்து கொள்கிறான்.
அதுமட்டுமல்லாமல் அந்த நினைவுகளில் அவனுக்கு காதல்,ஈர்ப்புகள் வருகின்றது.வாழ்வில் காதல் இல்லாத மனிதனும் காமம் இல்லாத மனிதனும் இருக்க முடியாது.
காரணம் ஒவ்வொருவருக்கு ஒரு அரவணைப்பு தேவைப்படுகிறது.அந்த வகையில் விஜயனுக்கும் திவ்யா,அல்லி,உள்ளிட்ட பெண்கள் மீது காதல் உண்டாகிறது.திவ்யா மீது ஈர்ப்பு கொண்டு அவளுடன் அடிக்கடி தங்கிவிட்டு செல்வான்.
இறுதியில் அவள் தற்கொலைக்கு முயள்கிறாள்.அந்த கொலை விஜயன்தான் செய்தான் என்று சந்தேகிக்கப்பட்டு விஜயனை போலீசார் தேடுகின்றனர்.அதிலிருந்து தப்பிக்கதான் இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கிக்கொண்டு இருக்கிறான் விஜயன் என்று கதை நகர்கிறது.
வெளியே வந்தால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து,மரணம் என்ற இருளில் அடைத்துவிடுவார்கள்.அதற்கு பதில் இருந்த இருளில் இருந்துவிடலாம் என்று விஜயன் எண்ணுகிறான்.
இதில் அரசியலைப் பற்றியும் ஆசிரியர் தெளிவாக கொடுத்து இருக்கிறார்.எல்லோரும் ஒற்றுமையாக இருந்ததை இந்து,முஸ்லீம் எனப் பிரித்ததை இந்நாவல் காட்டுகிறது.
கட்டிட இடிபாடுகளில் மற்றவர்களுக்கு என்ன நடந்திருக்கும் ,இறந்திருப்பார்களா? அல்லது உயிருடன் இருக்கிறார்களா? என்று தெரிந்துகொள்ள முடியாமல் விஜயன் இருக்கிறான்.தான் உயிருடன் தான் இருக்கிறேன் இல்லை ,இறந்துவிட்டேன் ,இறக்கமாட்டேன் என்று பல விதமான கற்பனை உலகத்திலும் விஜயன் வாழ்கிறான்.
எப்படியாவது அந்த இருள் சூழ்ந்த கட்டிட இடிபாட்டில் இருந்து வெளியே மீண்டு போக வேண்டும் என்று முயற்ச்சி செய்தவன்.இறுதியில் விஜயனை மீட்புப்படையினர் மீட்கிறார்கள்.
அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான்.போலீசார் வந்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.கைது செய்யப்படுவாய் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மருத்துவமனையில் இருந்து விஜயன் தப்பித்து மீண்டும் தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிமெண்ட் பாளம் நிறைந்த ஒரு இடத்தில் குதிக்கிறான்.
அவனைச் சுற்றி பாளங்கள் சூழ்ந்தன .மீண்டும் அந்த இருள் நிறைந்த வாழ்க்கைக்கு சென்றுவிட்டு இனி என்னை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என நினைத்து புன்னகைத்துக்கொண்டான்.
ஆசை,அதிகாரம்,மரணம்,பணம் என்று இருக்கக்கூடிய வாழ்க்கையில் மனிதனுடைய இருப்பு ஒரு கேள்விக்குறியாகி விடுகிறது.இந்த வாழ்க்கையில் இருந்து எப்படி தப்பிப்பது, எப்படி வாழ்வது என்று தான் இந்த நாவல் உணர்த்துகிறது.இந்த வாழ்க்கை கணத்தை சமாளிக்க இல்லாமல் இறந்து போவது தான் முடிவு என்று விஜயன் வருகிறான்.
ஆசிரியர் புத்தகத்தில் கூறியிருப்பார்,அவன் சென்று சேர ஒரு இடிந்த கட்டிடம் இருந்தது,மற்றவர்களுக்கு என்ன காத்திருக்குமோ என்ற அவலத்தை எல்லோரும் உணரும் கணம் தான் என்று இந்த கதைக்களத்தில் உணர்ந்திருப்பதாக கூறியிருப்பார்..
ஆம்,நானும் அதை தான் உணர்கிறேன் நான் மட்டுமல்ல இந்த புத்தகத்தை படிக்கும் அனைத்து வாசகர்களும் உணர்வார்கள்...
இந்த நாவல் படிக்க தொடங்கியதில் இருந்து நாவல் முடியும் வரை அடுத்து என்ன நடக்கும் ,அடுத்து எந்த சம்பவத்துடன் ஆசிரியர் இணைத்து கதையை நகர்த்துவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது.. அந்த வகையில் ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி...
இறுதியாக புத்தகத்தில் பிடித்தது,
மரணம் ஒரே மாதிரி இருக்காது. இடிபாடுகளில் சிக்கி ஏற்படும் மரணம் ஒருவிதமானது. இடிதாக்கி இழப்பது வேறுவிதமானது. நோய் தாக்கி இறப்பது வேறுவிதமானது.தூக்கு மேடையின் மரணம் உண்மையில் கிலேசம் தருவது அதை எதிர் கொள்வதற்கு பதிலாக அவன் சிமெண்ட் பாலங்களின் நடுவிலேயே உயிர் விட்டுவிடுவான்.இப்படி மரணத்தினுடன் உறையாடுகிறது இந்நாவல்,'இருள் பூமி'
- எழில் ஆதித்தமிழன்
18-03-2022
Comments
Post a Comment