வன்மம்-பாமா
புத்தகத்தின் பெயர்: வன்மம்
ஆசிரியர்: பாமா
பாமா ஏற்கனவே சுருக்கு, சங்கதி என்ற நாவல்களையும், கிசும்புக்காரன்' என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார். வன்மம் நாவல், கண்டம்பட்டி என்ற ஊரிலுள்ள, பள்ளர் பறையர் என்ற இரு ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையிலுள்ள பகைமையையும் நட்பையும் விரிவான தளத்தில் எடுத்துச் சொல்கின்றன.
அந்த ஊரிலுள்ள பறையர்களில் ஏராளமானவர்கள் கிறிஸ்தவ மதத்தவர்களாகவும், பள்ளர்கள் இந்து சமயத்தவர்களாகவும் இருக்கின்றனர். பறையர்கள் வெளியூர்களுக்குப் படிக்கப்போகவும், பணம்காசு சேமிக்கத் தொடங்கவும் அந்த ஊரிலுள்ள ஆதிக்க சாதியினரான நாயக்கர்களுக்குப் பிடிக்காமல் போக பள்ளர்களை உசுப்பி பறையர்களுடன் மோத விடுகின்றனர். இந்தச் சூழ்ச்சியை அறிந்தும் அறியாமலும் பள்ளர்களும் பலியாகிப்போகின்றனர்.
பறையர்களின் எழுச்சியை சகிக்காது உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்த பள்ளர்கள், தாங்கள் பறையர்கள் கூறிக்கொள்ளும் தலித் என்ற பிரிவுக்குள் வரமாட்டோம் அதையும் விட மேலுயர்ந்த சாதியினர் தாங்கள் என்று கூறிப்பெருமிதங்கொள்கின்றனர். வெளியூருக்குப் படிக்கப்போன பறையர் சாதி இளைஞர்கள் தங்கள் சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்றெண்ணி 'கழனிக் கலைக்குழு' என்றமைத்து தமது சமூகத்து மக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இதன்பிறகு தமது பறையர் தெருச் சாவடியில் அம்பேத்காருக்கு ஒரு சிலை வைக்கின்றனர். இதற்கு பள்ளர்களும் நிதியுதவி செய்கின்றனர். எனினும் பறையர்கள் அம்பேத்காருக்கு சிலை வைத்தால் தாங்கள் இம்மானுவேலுக்கு சிலை வைக்கவேண்டும் என்று பள்ளர் தெரு இளைஞர்கள் கூற , பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் இதுவரை உரசிக்கொண்டிருந்த பகை வன்மமாக உருவெடுக்கின்றது. அதன் தொடர்ச்சியில் பறையர் சாதி ஆண் ஒருவரை ஓட ஒட வெட்டிச் சாய்க்கின்றனர், பள்ளர் சாதி இளைஞர்கள். இந்த அப்பாவி உயிர்ப்பலிக்கு உடனேயே பழி தீர்க்கவேண்டுமென்று கோபப்படும் பறையர் சாதி இளைஞர்களை அவர்களது நாட்டமையும் பெரியவர்களும் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் இந்தக் கொலையைப் போல முன்பும் பலமுறை பல பறையர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்ற யதார்த்தம் புரிபட தமது உயிர்களுக்கு எந்த உத்தரவாதமுமில்லை என பறையர் சாதி இளைஞர்களுக்கும் விளங்குகின்றது.
இதற்கிடையில் இந்த கொலையைப் பார்த்த முன்றுபேர் வீச்சரிவாள் முதுகில் சுமந்துகொண்டு, பள்ளர்களில் ஒருவரையாவது வெட்டாமல் விடுவதில்லையென வன்மத்தோடு அலைகின்றார்கள்.ஒருநாள் பசாரில், மூன்றுபேரை வெட்டிவிட்டு அந்த இளைஞர்கள் ஊரைவிட்டே ஓடிப்போகின்றார்கள். அந்த ஆத்திரத்தில் பள்ளர்கள், பறையர் சாதி ஆண்கள் ஓடித்தப்பியதால் இரண்டு பெண்களைப் வெட்டிவிடுகின்றனர். இதன் தொடர்ச்சியில் பறையர் தெருக்கள் முழுதுமே இடம்பெயர்ந்து ஊரே வெறிச்சோடிப்போகின்றது. கலவரத்தைத் தடுக்க வருகின்ற போலீசும் பள்ளர்களுக்குச் சாதகமாக நிற்க, பறையர்கள் பஞ்சத்திலும் உயிர்ப்பயத்திலும் அலைக்கழிகின்றனர்.
வேறு ஊர்களில் ஒளித்துநின்றாலும் பறையர் சாதி ஆண்களைப் போலீஸ் தேடி தேடிப் பிடித்து சிறைக்குள் அனுப்புகின்றது. பெண்கள் போலீசாலும், பட்டினியாலும் சொல்லவொண்ணா துயரங்களைச் சந்திக்கின்றனர். படிப்பதற்குப் போன பிள்ளைகள் பாடசாலைகளுக்குப் போகாமல் நிற்கின்றனர். அத்துடன் பறையர்கள் எங்கு போகவேண்டுமென்றாலும், பள்ளர் மற்றும் ஆதிக்கச் சாதிகளில் தெருக்களைத் தாண்டித்தான் போகவேண்டும் என்பதால் ஒரு நாள் கஞ்சிக்குடிப்பதற்கு உழைக்கக் கூட முடியாமல் தங்கள் தெருக்களுக்குள்ளேயே அடங்கிக்கொள்கின்றனர், உயிர்ப்பயத்துடன். இப்படி மூன்று வருடங்களாய் நிகழும் வன்மத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று இரண்டு சாதி நாட்டாமைகளூம் கடுமையாக முயல்கின்றனர்.
வெட்டிக்கொல்லப்பட்டவர்கள் போய்விட்டனர் இனி நாமாவது பகையில்லாது வாழ்வேண்டும் என்று, பறையரை வெட்டிக்கொன்றவரின் வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது, பறையர்கள் சாட்சி அளிக்காது தவிர்த்துவிடுகின்றனர். அவ்வாறே பள்ளர்களை வெட்டிக்கொன்ற வழக்கில் தாங்களும் சாட்சி சொல்லமாட்டோம் என்று பள்ளர்களும் உறுதியளிக்கின்றனர். இனி தமது பகைமையை மறந்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று உறுதிப்படுத்துகின்றனர். அதுவரை பஞ்சாயத்து தேர்தலில் பிரசிடெண்டாய் வருகின்ற நாயக்கர்களுக்கு எதிராக பள்ளர்களும், பறையர்களும் ஒன்றாய் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறவும் செய்கின்றனர். இனிமேல்பட்டு நம்ம ரெண்டு சாதிகளும் சண்டை சச்சரவு போடாமே, வாழனும். இந்த பஞ்சாயத்துத் தேர்தல்ல செயிச்சது மட்டும் போதாது. சட்டசபை, நாடாளுமன்றம் எல்லா எடத்துலயேயும் நம்ம தலித்துக குரல் ஓங்கி ஒலிக்கனும். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்கார் சொன்னதுபோல, அரசியல் அதிகாரத்தைக் கைப்பத்தனும். அதுக்கு இது முதல்படியா இருக்கட்டும் என்கின்றார் ஒருவர். இறுதியில், இனிவரும் தலைமுறையாவது வன்மமில்லாமெ, வன்முறை இல்லாமெ, சண்டை சச்சரவு இல்லாமெ, ஒன்னா மண்ணா இருக்கனும்னு இப்ப உள்ள சனங்க கடுமையா பெராயாசைப்பட்டு, திட்டமிட்டு செயல்பட்டாக. வருங்காலத்தப் பத்திய நம்பிக்கையோடெ, பயமும் இருக்கத்தான் செய்யுது. இருந்தாலும் மனசுல தெளிவும், தீர்க்கமான உறுதியும் இருந்துச்சு என்றபடி நாவல் நிறைவுபெறுகின்றது.
பாமாவின் ‘வன்மம்’ நாவலில் வரும் அவுக தெருவுலருந்து டீச்சருக, டாக்டருக, வக்கீலுக, காலேசு வாத்தியாருக அப்பிடி இப்பிடின்னு நெறய்யாப் படிச்சுட்டாக அதானெ இப்ப நம்மகிட்ட வேல வெட்டிக்கு வரமாட்டானுக எனும் பகுதியின் வழி தலித் பெண்களின் கல்வி வளர்ச்சியால் அடிமைத் தொழிலை விட்டு, பொருளாதார முன்னேற்றப் பாதையில் அவர்கள் செல்வதை அறிய முடிகிறது.
பிறப்பாலும் பொருளாதாரத்தாலும் ஒருவரை அடிமைப்படுத்தினால் அவர்களை அதிகாரப்படுத்தி தன்க்குகீழ் வைத்து கொண்டால் அவர்கள் ஒன்று சேர்ந்தால் மேல் இருப்பவர்களுக்கு என்ன நிலை வரும் என்பதையும் விளிம்பில் இருப்பவர் ஒன்று இணைந்தால் யாராலும் அவர்களுக்கு பிரச்சனை வராது என்றும் ஒற்றுமையாக இருந்தால் உடைக்க முடியாது என்றும் வன்மம் இல்லாத வன்முறை இல்லாத சமுதாயம் அமைவதற்கு இரு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்....
-எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment