நரியண்ணா....

ஓர்‌ அடர்ந்த காடு.அந்த காட்டில் பலவிதமான மரம்,செடி, கொடிகள் பச்சைப் பசேலென்று நிறைந்து காணப்பட்டன.இப்படி இருக்கும்போது,அந்த காட்டின் இன்னொரு இடத்தில் மட்டும் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.அந்த ஆலமரத்தில் இலைகள் எதுவும் கிடையாது.நன்றாக காய்ந்து போன பட்டமரம் அது.நிறைய உயரமான கிளைகளுடன் அது கம்பீரமாக காட்சியளித்தது.அந்த பெரிய காட்டிலே இது தனித்துவமாக இருந்தது.அந்த ஆலமரத்தின் அடிப்பகுதியில் பெரிய குகை ஒன்று இருந்தது.அந்த குகையில் ஒரு அப்பாவி நரி வாழ்ந்து வந்தது.மற்ற நரிகளைப்  போல் காட்டில் சுற்றித்திரியாமல் தன்னுடைய ஆலமரக் குகைக்கு பக்கத்திலேயே தனக்கு தேவையான இரைகளை (உணவுகளை) தேடிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தது.
                       அந்த ஆலமரத்தை சுற்றி நிறைய காகங்கள் வாழ்ந்து வந்தன.அந்த இடத்தில் அதிகப்படியாக காகங்கள் இருந்ததால்,இந்த காகங்கள் அந்த அப்பாவி நரியை மிகவும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன.நரி இல்லாத போது அதன் குகைக்குள் புகுந்து அதனுடைய இரைகளை(உணவுகளை) சாப்பிடுவது,நரி தூங்கும் போது அதனை தூங்கவிடாமல் செய்வது என பல தொந்தரவுகளை அந்த அப்பாவி நரிக்கு தந்தன.
                      இந்த தொந்தரவுகளை எல்லாம் தாங்கிக்கொண்டு அந்த நரி அமைதியாக இருந்தது.அந்த காகங்களின் கூட்டத்தில் ஒரு “குட்டி காகம்” ஒன்று இருந்தது.அந்த குட்டி காகத்திற்கு இந்த அப்பாவி என்றால் ரொம்ப பிடிக்கும்.அதேபோல் நரிக்கும் அந்த குட்டி காகம் என்றால் மிகவும் பிடிக்கும்.தினமும் அந்த குட்டி காகம் நரியின் குகைக்கு வந்து நீண்ட நேரம் விளையாடுவதும்,அங்கேயே உணவு உண்பதுமாக இருந்தது.மனம் நிறைய அந்த அப்பாவி நரியை நரியண்ணா! நரியண்ணா! என்று பாசமாக அழைத்து வந்தது.இந்த குட்டி காக்கையின் நடவடிக்கையை ஒரு சூழ்ச்சி நிறைந்த காகம் பார்த்துவிட்டு,மற்ற காகங்களிடம் கூறியது.இதை அறிந்ததும் அந்த அப்பாவி நரியை மேலும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன.இப்படி தொந்தரவு செய்வதை பார்த்து,அந்த குட்டி காகம் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானது.
                நரியும் நாம் இந்த காகங்களை என்ன செய்தோம், ஏன்?நம்மளை இப்படி தொந்தரவு செய்கின்றார்கள்,என்றைக்கு தான் நம் நிலைமை மாறுமோ,என்று கவலையுற்று,தனது ஒவ்வொரு பொழுதையும் மகிழ்ச்சியே இல்லாமல் பயத்துடனும்,கவலையுடனும் கழித்துது.
         ஓர் நாள் இரவு அடைமழை வெளுத்து வாங்கியது.சூறாவளி காற்றுபோல் சுழன்று சுழன்று அடித்தது காற்று.நரி தன் குகைக்குள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது.திடீரென்று நரியண்ணா!.. நரியண்ணா!.. என்ற சத்தம் கேட்டது.
        நரி பதறியெழுந்து குகைக்கு வெளியில் சென்று பார்த்தது.அங்கே,அந்த குட்டி காகம் மழையில் நனைந்து நடுக்கத்துடன் காணப்பட்டது.உடனே நரி அந்த குட்டி காகத்தை தன் குகைக்குள் அழைத்துச்சென்று,அதன் தலையை நன்கு துவட்டி விட்டுக்கொண்டே கேட்டது,என்ன ஆச்சு? என்று.அதற்கு அந்த குட்டி காகம் காற்றடித்ததில் தங்களுடைய கூடு அனைத்தும் விழுந்துவிட்டது.மழையோ விடாமல் பெய்துகொண்டிருக்கிறது ,இருப்நதற்கு இடமே இல்லை.எல்லோரும் மழையில் நனைந்து நடுக்கத்துடன் அலைந்துகொண்டு இருக்கின்றார்கள் என்றது.
     இந்த அப்பாவி நரிக்கு ஏற்கனவே பரிதாப குணம் அதிகம்.அதுவும் தனக்கு பிடித்த ஒரு நபர் இப்படி கூறும்போது, நரிக்கு மனம் கலங்கியது.உடனே,சரி நீ இங்கேயே இருந்துகொள்.நிலைமை ‌மாறியதும் வேறு ஒரு கூட்டைக் கட்டிக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறியது.பிறகு அந்த குட்டி காகத்திறக்கு உண்பதற்கு கொடுத்தது,அந்த குட்டி காகம் அங்கேயே உறங்கிவிட்டது.
          நரிக்கு ஒரே யோசனை.இந்த குட்டி காகம் இங்கே வந்து இருக்கிறது,இன்னும்‌ நமக்கு என்னென்ன தொந்தரவுகளை தரப்போகிறார்கள் என்று இல்லை, வெளியில் மழை அதிகமாக இருக்கின்றது.இந்த காகங்கள் எல்லாம் எங்கே கிடந்து அவஸ்தைபட்டு கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை என்று கவலைப்பட்டு கொண்டிருந்தது.
                                    
 மறுநாள் காலை விடிந்து விட்டது.நரி குகையைவிட்டு வெளியில் வந்து பார்த்தபோது,அங்கே அனைத்து காகங்களும் தன்னுடைய குகைக்கு முன் இருப்பதை பார்த்து திகைப்புற்று இருந்தது.உடனே,நரி அவைகளை எல்லாம் தன் குகைக்குள்ளே அழைத்து அடைக்கலம் தந்தது.நரியின் இந்த செயலை பார்த்த காகங்கள்,நரியிடம் மனமிறங்கி தாங்கள் செய்த தொந்தரவுகளுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டு வருத்தப்பட்டன.உடனே நரி வருத்தப்பட வேண்டாம் நண்பர்களே,நாம் அனைவரும் ஒன்று தான்.ஒரேயொரு வேற்றுமை தான் நான் நரி இனம்,நீங்கள் காக்கை இனம் அவ்வளவு தான்.நாம் அனைவரும் ஒரு இடத்தில் வாழக்கூடியவர்கள் ஒருவொருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்தால்தான் ஒற்றுமையாக வாழமுடியும் என்றது நரி. மழையும் நின்றது.காகங்களும் தங்களுக்கான புதிய கூடுகளை கட்டிக்கொண்டு காகங்களும் நரியண்ணாவிடம் நட்புடன் வாழ்ந்து வருகின்றனர்..

நீதி :
           இனம் வேறாக இருந்தாலும்,
           மனம் ஒன்றாக இருக்க வேண்டும்..

இக்கதையில் இருந்து நாம் அறிந்து கொள்வது,
                                                          
 இதே போல் மனிதர்களிலும் பெரும்பான்மையாக உள்ளவர்கள், சிறுபான்மையினரை தொந்தரவு செய்தும், அவர்களை துன்புறுத்தியும் வருகின்றனர்.சிறுபான்மை, பெரும்பான்மை என்பதை விட்டு விட்டு அனைவரும் சமம் என்று,ஒற்றுமையாக வாழ்ந்தாலே அல்லது நினைத்தாலே போதும் பாதி பிரச்சனை தீர்ந்து விடும் என்று இந்த கதை நமக்கு உணர்த்துகிறது….

                        ✍️ஆக்கம் - எழிலரசன் ஜெ

Comments