சிறுவயது சினேகிதம்....

              சிறுவயது சினேகிதம்…


நான் பிறந்தது ஒரு அழகான கிராமம்.சுற்றிலும் வயல்வெளிகள் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்.காண்பவர்களின் கண்கள் பறிக்கும் வகையில் இருக்கும்.அப்படிப்பட்ட கிராமத்தில் சிறிய தொடக்கப்பள்ளி ஒன்று இருந்தது.அதன் பக்கத்தில் சிறு அங்கன்வாடி ஒன்று இருந்தது.அங்கு தான் எனக்கு அறிமுகம் ஆனார்கள்,ஆதியும்,தமிழும்‌. எங்களுக்கு நான்கு வயது இருக்கும் போதே எங்களை அந்த அங்கன்வாடியில் சேர்த்துவிட்டார்கள். எங்களின் நான்கு வயதிலேயே எங்களின் நட்பு ஆரம்பமாகிவிட்டது. அப்போதிலிருந்து எங்கு சென்றாலும் நாங்கள் மூவராக தான் செல்வோம். யாரும் யாரையும் விட்டுவிட்டு செல்ல மாட்டோம். 
     அங்கன்வாடியிலும் சரி தொடக்கப் பள்ளி படிக்கும் போதும் சரி எங்களின் குறும்புகளும், சிரிப்புகளும், ஒன்றாகவே இருந்தன. நாட்களும் சென்றன. நாங்களும் பத்தாம் வகுப்பு பயில தொடங்கினோம் மகிழ்ச்சியாக பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தோம்.
     ஒரு நாள் இரவு நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆதி சொன்னான், ‘டேய், இளநீர் குடிக்கலாமா' என்று, நாங்கள் இருவரும் சொன்னோம், மரம் எங்கடா இருக்கு, ‘என் வீட்லயும் மரம் இல்ல, தமிழ் வீட்லயும் மரம் இல்லை அப்புறம் எப்படி இளநீர் குடிக்கிறது, அதுவும் இந்த நேரத்துல அப்படின்னு சொன்னோம்.
     அதற்கு ஆதி சொன்னான், 'டேய் லூசு பசங்களா, மரம் எல்லாம் இருக்கு நீங்க வரிங்களா சொல்லுங்க, அது போதும் என்று,  சொன்னான். அதற்கு தமிழ் கேட்டான், இந்த நேரத்துல எங்கடா மரம் இருக்கு திருட கிருட போறியா என்னன்னு  கேட்டான். ஆதி சிரித்துக்கொண்டே, 'அட மடப்பயலே, திருடத்தான் போறோம்ன்னு சொன்னான். டேய், இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நான் சொல்ல, உடனே, ஆதி நீங்க வந்தா வாங்க இல்லைன்னா போங்க நான் போய் இளநீர் குடிக்க போறேன்னு போய்விட்டான்.பின்னாடியே நாங்களும் போய் விட்டோம். அவனுக்கு நன்றாக தெரியும் அந்த மாதிரி சொல்லிவிட்டு போனால் நாங்கள் அவன் பின்னாலேயே வந்துவிடுவோம் என்று.
     
சரின்னு மூன்று பேரும் போனோம். நடுவழியில தமிழ் கேட்டான், ஆமாண்டா ஆதி எங்க இளநீர் திருட போறோம்னு. அதுக்கு ஆதி சொன்னான், நம்ம ஊரு அய்யர் வீட்டு தோப்புல தான்டானு. எங்களுக்கு தூக்கி வாரி போட்டது. டேய் வேணாண்டா அய்யர் நம்மள கட்டிவச்சி அடிப்பார்னு சொன்னோம். ஆதி ரொம்ப அமைதியா சொன்னான், அதெல்லாம் நாம மட்டும் தானே அப்படின்னு. ஒரு வழியா தோப்புல இறங்கிட்டோம். ஆதி தான் எங்க கேங்க்ல மரம் ஏறுவான். அதனால அவனையே  ஏற சொன்னோம்.
   
ஆதி, மரம் ஏறுவதற்கு தயாராக இருந்தான். ஏறும்போது, 'டேய் மேலே இருந்து பறிச்சு போடுறத ஒரு ஓரமா எடுத்து வைங்க, நான் கீழே வந்ததும் அடிச்சு குடிச்சிட்டு போவோம்னு’, சரி, ஏறுடா மணி ஆகுதுன்னு நான் சொல்ல, ஆதி மரம் ஏற ஆரம்பித்தான். அவன் மரத்திலிருந்து இளநீர் காய்களை ஒவ்வொன்றாக பரித்து போட்டான். நானும், தமிழும், ஒரு திட்டம் போட்டோம். தமிழ், அவன் பறிச்சு போடட்டும், நாம ஒவ்வொன்னா அவனுக்கு தெரியாம அடிச்சு குடிச்சிடலாம்னு திட்டம் போட்டோம். நாங்க திட்டம் போட்டபடியே அவன் பறிச்சு போடவே, நாங்க அடிச்சி குடிச்சிட்டே இருந்தோம்.
    
ஆள்நடமாட்டம் வர சத்தம் கேட்டது. உடனே, ஆதியை கீழே இறங்க சொன்னோம். அவனும் கீழே இறங்கினான்.அவனுக்காக எடுத்துவைத்த மூன்று இளநீர்களை அவனிடம் கொடுத்தோம். 
அதற்கு அவன் என்னடா மூனு தான் தர்றீங்க, மத்தது எல்லாம் எங்கனு  கேட்டான். அதுக்கு நான் சொன்னேன், அதையெல்லாம் எப்பவே அடிச்சி குடிச்சாச்சு, இத நீ குடிக்கிறியா இல்லையான்னு திமிரா கேட்டேன். அடப்பாவிங்களா, இதுக்கு தான் உங்கள நம்பவே கூடாது. நல்ல வேல நான் பறிக்கும் போதே அடிச்சு குடிச்சது நல்லதா போச்சு என்று சொன்னான்.
       அதக் கேட்டதும் அவனைக் கீழே தள்ளி உருண்டு, புரண்டோம். ஆள் வர சத்தம் கேட்டது. நாங்கள் மூவரும் அந்த மூன்று இளநீரை சத்தமில்லாமல் குடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பினோம். மறுநாள் பள்ளியில் இதைப் பற்றிப் பேசி சிரித்துக் கொள்வோம். இப்படியாக ஆரம்பித்த எங்கள் நட்பு, இன்று எங்களுக்கு இருபத்து மூன்று வயதாகியும் அதே மாதிரியான நட்புடன் தான் இருக்கின்றோம். ஒரே ஒரு வித்தியாசம்தான், அப்போது தினமும் பேசிக் கொள்வோம், இப்போது எப்பொழுதாவது சிறிய வயது நினைவுகளை நினைத்து பேசிக்கொண்டு மகிழ்வோம்.

 இனிமேலும் தொடரும் எங்களின் சிறுவயது சினேகிதம்….

இக்கதையிலிருந்து நாம் அறிந்துகொள்வது,

          எப்போதும் நண்பர்களாகவே, இருக்கின்றார்கள். அவர்கள் சிறுவயதில் சுற்றித்திரிந்தது போல், இப்பொழுது சுற்றித்திரிய முடியவில்லை என்றாலும், சிறுவயதில் ஏற்பட்ட நினைவுகளுடன் இன்னும் நிறைய நண்பர்கள் தங்களின் சிறுவயது சினேகிதத்தை அப்படியே தொடர்ந்து வருகிறார்கள் …

              ✍️ ஆக்கம் - எழிலரசன் ஜெ

Comments