தந்தைக்கு தந்தையாக....


               தந்தைக்கு தந்தையாக…..



 தெற்கு வீதியில் ஒரு எளிமையான குடும்பம் ஒன்று இருந்தது கணேசன் கமலா என்ற தம்பதியினருக்கு சண்முகம் என்ற மகன் இருந்தான் கணேசனும் செல்வியும் சண்முகத்தின் மேல் அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தனர். கணேசன் இரும்புப் பட்டறை ஒன்றை சொந்தமாக வைத்திருந்தார்.அவருக்கு உதவியாக செல்வியும் சென்று, அங்கு இருக்கக்கூடிய வேலைகளை பார்த்து வந்தாள்.சண்முகம் பள்ளிக்கு சென்றுவிடுவான். கணவன்,மனைவி இருவரும் நாள் முழுக்க பட்டறையில் வேலை பார்த்து பொழுது சாயும் போது வீடு திரும்புவார்கள். அந்த நேரம் பள்ளிக்கு சென்ற சண்முகமும் வந்துவிடுவான்.செல்வி வீட்டிற்கு வந்தவுடன் இரவு உணவு சமைக்க தொடங்கிவிடுவாள்.சண்முகம் விளையாடிவிட்டு இன்றைக்கு பள்ளியில் நடந்த விசயங்களை எல்லாம் கூறுவான்.கணேசன் அதை மெய்மறக்க கேட்டுக்கொண்டிருப்பார்.
                

       கணேசன் தன் பிள்ளைக்கு அன்பும்,பாசமும் ஊட்டிஊட்டி வளர்த்தார். தன் பிள்ளைக்காக என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய மனிதர். ஆனால் வறுமை அவர்களை வாட்டி எடுத்தது. எவ்வளவு வறுமை,கஷ்டங்கள் வந்தாலும் தன் பிள்ளைக்கு வறுமை தெரியாமல் வளர்த்து வந்தார்.
              

   கணேசன் ஒரு மிதிவண்டி (சைக்கிள்) வைத்து இருந்தார்.அதில் தான் எங்கு வேண்டுமானாலும் சென்று வருவார். அந்த மிதிவண்டியை பத்திரப்படுத்தியும், சேதம் அடையாமல் பாதுகாத்தும் வருவார்.இதனாலேயே அவரை ஊரில் உள்ள அனைவரும் “ சைக்கிள் கணேசா..  சைக்கிள் கணேசா”.‌.. என்று அழைப்பார்கள். சைக்கிள் கணேசன் என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும்.குடும்பம்,வீடு,பட்டறை, மற்றும் மிதிவண்டி இவைகள் தான் கணேசனுக்கு உலகம்.
          
இப்படியாக இருக்கும் போது சண்முகமும் நன்றாக படிக்க தொடங்கினான். மேல்நிலையை தேர்ச்சிபெற்று, இளநிலை படிப்பான் வழக்கறிஞர் படிப்பை தேர்வுசெய்து படிக்கத் தொடங்கினான்‌.அந்த ஊரில் பேருந்து வசதி கிடையாது.பள்ளிப்படிக்கும் போது  தன் தந்தை தான் மிதிவண்டியில் பள்ளிக்கூடத்தில் விடுவார்.இப்பொழுது கல்லூரிப்படிக்கும் போதும் அவர்தான் கல்லூரியில் விடுவார்.சண்முகம்  குடும்ப வறுமையையும்,தந்தையின் கடின உழைப்பையும் உணர்ந்தான். எப்படியாவது நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்ற வெறியோடு படித்தான்.

        கல்லூரி  நாட்களில் தன் தந்தையின் பட்டறையில் வேலை,கல்லூரி நாட்களில் படிப்பு என்றபடி இருந்தது.ஐந்து வருடம் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, சைக்கிள் கணேசனின் மகனாகவும், வழக்கறிஞர் சண்முகமாகவும் வீட்டிற்கு வந்தான்.தனது தந்தைக்கும், தாய்க்கும் அளவுக்கடந்த சந்தோசம்.தான் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் வீணாகவில்லை என்று மகிழ்ச்சியடைந்தார்கள். காலம் செல்லச்செல்ல சண்முகம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தான்.கணேசனுக்கும் வயது ஆகி,பார்வை குறைபாடு ஏற்பட்டது.பார்வை சரியாக தெரியவில்லை என்றாலும்,யார் சொல்லியும் கேட்காமல் தனது பட்டறைக்கு சென்று வேலை பார்க்க சென்றார்.சண்முகமும் தன் தந்தையுடன் சென்று அவரை ஒருஓரமாக அமரவைத்துவிட்டு, சண்முகம் அங்கு இருக்கக்கூடிய வேலைகளை பார்த்தான்.ஊர்க்காரர்கள் பார்த்து, ‘ஏப்பா சண்முகம்,அரசாங்க உத்தியேகத்திற்கு போற உனக்கு ஏன் இந்த வேலை’, என்று கேட்டார்கள்.
                

அதற்கு சண்முகம்,நான் இந்நிலைக்கு வர காரணம்,என் தந்தையும்,இந்த பட்டறையும் தான்.இந்த வேலே செய்து தான் என் தந்தை என்னை படிக்க வைத்தார்.அதனால் நான் இந்த வேலைசெய்வது தவறில்லை, செய்யாமல் விட்டால்தான் தவறு என்று கூறினான்.தன் பிள்ளையின் இந்த பேச்சைக்கேட்டு கணேசனினி முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது‌. அதுமட்டுமல்லாமல், ஊரில் உள்ள சனங்கள் சைக்கிள் கணேசன் அவன் பிள்ளையை நன்றாக படிக்க வைத்து ஆளாக்கி விட்டான் என்று கூறும்போது,கணேசனுக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.
                 

நாளடைவில் கணேசனுக்கு பார்வை தெரியாமல் போனது. சண்முகம் தான் தன் தந்தைக்கு என்னென்ன வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து வந்தான் வறுமை இல்லாமல் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள் இதற்கு எல்லாம் காரணம் தன் மகன் தான் என்று இருவரும் பெருமைக்கு உள்ளானார்கள். திடீரென்று கணேசனுக்கு சைக்கிளில் போக வேண்டும் என்று ஆசை வந்தது ஆனால் பார்வை தெரியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார் சண்முகம் தனது தந்தையின் மனநிலையை புரிந்து தன் தந்தையின் மிதிவண்டியை எடுத்து,அதில் தன்னுடைய தந்தையை மிதிவண்டி பின்னால் இருக்கையில் அமர வைத்து ஊர் முழுவதும் சுற்றினார்.கணேசனும் நீண்ட நாட்களுக்கு பிறகு மிதிவண்டியில் செல்வது,அதுவும் தன் மகன் தன்னை அமரவைத்து கூட்டிச்செல்வதை நினைத்து  மிகவும்மகிழ்ச்சி அடைந்தார்.வாரத்திற்கு ஒருமுறை தன் தந்தையை மிதிவண்டியில் கூட்டிச்செல்வான்.இதேபோல் தன் தந்தைக்கு தந்தையாகவே மாறி அவருக்கு வேண்டியதை செய்துவந்தார் சண்முகம்…
  

நீதி : 
     ஒரு தந்தைக்கு வேண்டியது,பொன்னோ,பொருளோ கிடையாது அவர்களுடைய முதுமைப்பருவத்தில் தன் மகளோ,மகனோ நம்மை பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை மட்டும் தான்.

இக்கதையில் இருந்து நாம் அறிந்து கொள்வது,
       என்னதான் நாம் நல்ல படிப்பு,நல்ல வேலை என்று இருந்தாலும் நாம் கடந்து வந்த பாதைகளை என்றும் மறக்கக்கூடாது.நமது குழந்தைப் பருவத்தில் நமக்கு தந்தையாய் இருந்த நம் தந்தைக்கு,அவர்களின் முதுமைப் பருவத்தில் நாம் அவர்களுக்கு தந்தையாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இக்கதை நமக்கு உணர்த்துகிறது.

               ✍️ஆக்கம் - எழிலரசன் ஜெ

Comments