"புதிய வெயிலும் நீலக் கடலும்"புத்தக விமர்சனம்
புத்தகத்தின் பெயர்: புதிய வெயிலும் நீலக் கடலும்
ஆசிரியர் : நிஜந்தன்
நான் படித்த,எனக்கு பிடித்த மிக முக்கியமான புத்தகங்களில் இந்த "புதிய வெயிலும் நீலக் கடலும்" புத்தகமும் ஒன்றாகி விட்டது.காரணம், இந்த நாவலுடைய சாரம்சமும்,ஆசிரியருடைய எழுத்துவிதமும் தான்.
இந்த நாவலின் மொத்த சாரம்சமும் சொல்லிவிட்டால்,புதியதாக படிக்கும் வாசகர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிடும்.அதனால் இந்த நாவல் உணரத்துகின்ற ஒரு சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்..
இந்த நாவல் முழுவதும் இலட்சியங்கள்,தோல்விகள்,இலக்குகள், மீறல்கள் இவைகளே மாறி மாறி நிகழ்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல்வேறு சிந்தனைகளோடு இணைந்து வரும் கதாபாத்திரங்களை பதிவு செய்கிறது இந்த நாவல்.
குற்றமும்,தண்டனையும் எப்படி மாறிவிடுகிறது என்றும் இந்த நாவல் உணரத்துகிறது.மிகுந்த கட்டுப்பாடுடனும்,கடமையுடனும் இருந்த ஒரு மனிதனை சூழல் எப்படி அவனை மாற்றுகிறது என்று தெளிவாக விளக்குகிறது.திரும்ப திரும்ப ஒரு இடத்தை நாடும் அதிகார விருப்பங்களை காட்டுகிறது.
இவையெல்லாம் நாவலுடைய மையமாக உள்ளது என்று என் பார்வையில் நான் பார்க்கிறேன்..
இந்த நாவலில் ஆசிரியர் என்னவெல்லாம் கூறியிருக்கிறார், எதனுடன் எதை இணைத்து கூறியிருக்கிறார் என்று பார்ப்போம்.
முதலில்,
இந்த புத்தகத்தில் கதாபாத்திரங்களில் மிக முக்கிய கதாபாத்திரம் அசோகராஜன் மற்றும் லதா. இவர்களின் மத்தியில் தான் கண்ணகி,மெகருன்னிஷா,கோபால்,பைரவசாமி,சிவலிங்கம் இந்த மாதிரியான கதாபாத்திரங்களின் கதையும் வருகின்றது..
அசோகராஜன் ஒரு நக்சலைட்டாகவும்,படபிடிப்பாளராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் காட்டப்படுகிறது.லதாவை ஒரு உணர்ச்சிவயப்பட்ட பெண்ணாகவும்,அழுகை நிறைந்தவளாகவும்,ஆறுதல் தேடும் பெண்ணாகவும் காட்டப்படுகிறது.
வெறும் அசோகராஜன் மற்றும் லதாவை வைத்து சொல்லியிருந்தால் இந்த நாவலை எனக்கு பிடித்து இருக்காதோ என்னவோ. இவர்களுடன் இந்த கதாபாத்திரங்களை வைத்து அவர்களின் சூழல்,இருப்பு,ஏற்பு,குற்றம் போன்றவற்றை சொல்லியிருப்பது கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றது..
ஒரு ஆணும் பெண்ணும் தனியாக உட்கார்ந்து பேசினாலோ , நடந்தாலோ,வண்டியில் சென்றாலோ போதும் இந்த மனிதச்சமூகம் அவர்களை பார்க்கும் பார்வை வெவ்வேறு விதமாக இருக்கும்.
ஒன்று அவர்கள் காதலர்களாக இருப்பார்கள் என்று கூறுவர்.மற்றொன்று கள்ளக்காதலர்களாக இருப்பார்கள் என்று கூறுவர்.இன்னும் இரவு நேரத்தில் பேசினால் சொல்லவே தேவையில்லை எப்படியெல்லாம் சொல்லுவார்கள் என்று. வாழ்க்கையில் எதற்கும் தனிமை இல்லை.இன்று ஒரு உண்மையான ஆணும் பெண்ணும் உட்கார்ந்து பேசுவதற்கு இடமில்லை. அப்படி சென்றுக்கொண்டு இருக்கிறது இந்த சமுதாயம் என்று மிக அழகாக புரியும் வகையில் இந்த நாவல் பேசியிருக்கும்.
அடுத்ததாக, சிவலிங்கம் ஒரு போலீஸ் ஆபிசர்,செல்வம் ஒரு பார்வையில்லாத பாடகர். இதில் செல்வம் தன் மனைவி இருக்கும்போது மனைவியின் தங்கையுடன் பழக்கமாகி அவளுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்.மனைவியை அவளிடம் என்ன இருக்கு ஒன்றும் இல்லை அதனால் தான் அவள் தங்கையிடன் உள்ளேன் என்று கூறுவார். கொஞ்ச நாட்களுக்கு பிறகு மனைவி இன்னொருவருடன் காதல் கொண்டு சென்று விடுவாள் .அப்பொது அந்த நபர் செல்வம் கூறுவார்,என் மானம் மரியாதை எல்லாம் போய்விட்டது,நான் என்ன குறைவைத்தேன் என்று புலம்புவார்.இறுதியில் மனைவியும் வந்துவிடுவார் ஒற்றுமையாக வாழ்வார்கள்.
இதில் நான் பார்ப்பது,ஆண் தவறு செய்தாலோ அல்லது இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தாலோ மனைவிக்கு அவமானமாக இருக்காது.அவள் எதுவும் கேட்கக்கூடாது.இதே பெண் அவளுக்கு பிடித்தவருடன் காதல்வயப்பட்டால் அது அவமானம் அவளுக்கு நீங்களே ஒரு பெயர்சூட்டி விடுவீர்கள்.என்னங்க சார் உங்க சட்டம். உணர்வுகள் ஆண்,பெண் இருபாலருக்கும் ஒன்று தான்.
இந்த சமூகம் உடல் வேட்கையைத் தான் முக்கியம் என்று சென்று கொண்டிருக்கிறது.பசி,பட்டினி, சுயமரியாதை, தன்மானம்,நேர்மை,பொது வாழ்விலும் தனி வாழ்விலும் தூய்மை அடைய உடல் தேடல் ஒரு தடையாக இருக்கின்றது.காரணம்,இந்த தமிழ்ச்சமூகம் உடல் தேடலில் அழிந்துவிட்டது..
நம்முடைய வரலாறு எத்தகைய வன்முறை கொண்டது என்று கூறியிருக்கிறது. கடந்த காலங்களின் கசப்பு தான் நிகழ்காலத்து உண்மையில் நிறைந்து காணப்படுகிறது என்று இப்புத்தகம் பேசியிருக்கிறது.ஆம் உண்மை தான் கடந்த காலம் மிகவும் மனவேதனையும்,கசப்பும் நிறைந்து தான் இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, கோபால் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறான்.அவனுக்கு லதா மீது காதல் வருகிறது.லதாவுக்கு விதவிதமாக ஆடைகளை தைத்து தருகிறான்.அசோகராஜன் தான் அவனுடைய காதலுக்கு தடையாக இருக்கிறான் என்று அவனிடம் வெறுப்பு கொள்வான்.இறுதியில் எதிரியாய் வருவதும் கோபால் தான்.இதில் ஆடை பற்றி அசோகராஜன் ஒன்று கேட்பார்.
உடை உடல் மறைக்க உருவானது இல்லையா.அதில் அழகு பார்த்த சமூகம் கலைதாகம் கொண்ட சமூகமா அல்லது கலை என்று சொல்லி தன்னை ஏமாற்றிக்கொண்ட சமூகமா என்று.. இதில் பதில் கூறவில்லை எனக்கு இதற்கு பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும்...
அடுத்ததாக மிக வியந்து பார்த்த நகைத்து பார்த்த ஒரு கதாபாத்திரம் பைரவன் சாமி.எனக்கு ஏழு பிறவி .ஏழு பிறவியிலும் நான் அமெரிக்காவில் பிறந்தேன் அதிபரின் மகனாக.இந்தியாவில் பிறந்தேன் மந்திரியின் மகனாக .எனக்கு மரணமே இல்லை .நான் மரணித்தால் இந்த கதை முடிந்துவிடும் என்று கூறிக்கொண்டு இருப்பார்.இறுதியில் அவர் மரணித்து இருப்பார்..ஆனால் கதை முடிந்து இருக்காது..
இறுதியில் ,குற்றமும் தண்டனையும் பரிணாம வளர்ச்சியின் குறியீடுகளாக நின்றுவிடுவதை வரலாறு காட்டிக்கொண்டு இருக்கிறது..
கோபால் அசோகராஜனை கொல்ல அவன் வீட்டிற்கு வருவான்.அசோகராஜனை அடிப்பான்.அடிதாங்க முடியாமல் அசோகராஜன் கதறுவான்.
கோபால் வந்து கொல்ல நின்றான். அடி தாங்க முடியாமல் அசோக் கோபாலை தள்ளிவிட்டு இருக்கிறான்.கோபால் மரணித்து விட்டான்.
கொஞ்சம் தவறியிருந்தால் மரணம் மாறி நிகழ்ந்திருக்கும்.குற்றமும் மாறியிருக்கும்.குற்றவாளி என்று அறியப்படுபவனும் மாறியிருப்பான். ஒரு கணம் தான் எல்லாம்.கோபால் இறந்துவிட்டான்.அசோகராஜன் சிறையில் அடைந்துவிட்டான்.குற்றமும்,குற்றவாளியும் ஏன் எப்போதும் அடையாளம் இழந்து போகிறார்கள். யார் குற்றவாளி இல்லையோ அவர்கள் ஏன் எப்போதும் குற்றவாளி என்ற அடையாளம் பெறுகிறார்கள்.யாருக்கு தண்டனை வேண்டுமோ அவர்களுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை என்று இந்த நாவல் மிக சிறப்பாக உணரத்துகிறது.இறுதியில் அசோராஜன் சிறை செல்கிறான்.லதா பார்க்கசெல்கிறாள்..அவன் கைகளை பற்றிக்கொண்டு உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்று கதை முடிகின்றது...
மனித வாழ்வு இப்படிதானே நடந்துகொண்டு இருக்கின்றது.அதிகாரம் பெற வேண்டும்,அதிகாரம் வலுபெற வேண்டும் என்றால் அதற்கு அடித்தளமாக இருப்பது உறவுகள் தான் என்று நாவல் விளக்குகிறது. நேர்மையாக இருந்த அசோகராஜனே சூழலுக்கு ஏற்றாற் போல் மாறும் கணம் இதில் காட்டுகிறது.மொத்தத்தில் இந்த நாவல் ஒரு பெரிய வரலாற்றையும்,மனித இருப்புகளையும்,ஏற்ற இறக்கங்களையும் உணர்வுத்தளங்களையும், உணர்த்துகின்றது.இந்நாவலை படித்த பிறகு என்னுள் நிறைய தாக்கத்தையும்,நான் பார்த்த,சந்தித்த நிறைய விஷயங்களையும் எனக்கு நினைவுபடுத்தியதது.
அந்தவகையில்,"புதிய வெயிலும் நீலக்கடலும் "நாவலை கொடுத்த ஆசிரியரும் மனமார்ந்த நன்றிகள்...
✍️ - எழிலரசன் ஜெகதீஸ்வரன்
(உங்களில் ஒருவன்)
08-04-2022

Comments
Post a Comment