"கழுவப்படும் பெயரழுக்கு"புத்தக விமர்சனம்
புத்தகத்தின் பெயர் : கழுவப்படும் பெயரழுக்கு
ஆசிரியர் : யாக்கன்
நாம் அனைவருக்கும் அம்பேத்கர் யார் என்று தெரியும்.அம்பேத்கருக்கு அம்பேத்கர் என்ற பெயர் எப்படி வந்தது என்று நன்றாகவே தெரியும்.அத்தகைய அம்பேத்கர் என்ற பெயர் எப்படி வந்தது,உண்மையில் அம்பேத்கர் என்ற பெயர் யாருடையது.
இப்பொழுது உள்ள வரலாறு,புத்தகங்களில் இருக்கக்கூடிய அம்பேத்கரின் பெயர் காரணம் இவை எல்லாம் பிராமணர்களால் ஜோடிக்கப்பட்ட கட்டுக்கதை என்று இந்நூலின் ஆசிரியர் கூறுகின்றார்.
நானும் புத்தகத்தை முதலில் படிக்கும்பொழுது இவர் சொல்வதை எல்லாம் எப்படி நம்புவது என்று தான் யோசித்துக்கொண்டு இருந்தேன்.ஆனால் ஆசிரியர் மிக அருமையாக அவர் எடுத்த நேர்க்காணலையும்,பெயருக்கான ஆதாரங்களளையும் திரட்டி கூறும்பொழுது நம்பாமல் இருக்க முடியவில்லை.அதுவும் அம்பேத்கர் கைப்பட எழுதியவற்றை எல்லாம் ஆதாரமாக கொடுத்துள்ளார்.
முதலில் புத்தகத்தின் மையக்கரு என்னவென்றால்,
இந்தியாவில் தோன்றிய எந்தவொரு ஞானியம் அறிவுஜீவியும் புரட்சியாளரும் பார்பனர்களின் உதவியில்லாமல் அந்த உயர்ந்த நிலையை அடைந்திருக்கு முடியாது என்று பிரச்சாரத்திற்கு உதவுமீ வகையில் பார்ப்பனர்கள் பல்வேறு கட்டுக்கதைகளை திட்டமிட்டு எழுதி வைத்துள்ளனர்.அந்த கட்டுக்கதைகளை எவ்வித விசாரனையும் இன்றி பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பேசுபவர்கள்கூட இன்றுவரை நம்பப்பட்டு வருகின்றன.
பார்ப்பனிய சாதியத்திற்கு எதிராக அறிவார்ந்த தளத்தில் பெரும் தாக்குதல் நடத்தி அவற்றிற்கெதிராக மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்பிவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் மீதும் அந்த கதைகள் எழுதப்பட்டுள்ளன.
'அம்பேத்கர் என்ற பெயர் ஒரு பார்ப்பனருடையது' என்ற கட்டுக்கதை கழுவப்படாத பெயரழுக்காக தலைமுறை கடந்து வாழ்ந்து வருகிறது.அம்பேத்கர் பெயரின் பின்னுள்ள உண்மை வரலாற்றை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்து,கழுவப்படாத அந்த பெயரழுக்கை கழுவித்துடைக்கிறது இந்த நூல்...
அம்பேத்கருடைய வாழ்க்கை வரலாற்று நூல்களை தனஞ்செய்கீர்,டி.சி.அஹிர்,வசந்த்மூன் போன்ற எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.அவர்களுடைய எழுத்துக்களில் கூட ஒவ்வொரு மாற்றம் உள்ளது.அம்பேத்கர் பெயர் எப்படி வந்தது என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
1900-ல் அம்பேத்கர் சதாரா நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டபோதும்,1916 ஆம் ஆண்டு அம்பேத்கரால் எழுதப்பட்ட சுயவிவரக் குறிப்புகள் அடங்கிய அந்த கடிதத்தில் தனது பெயர் 'பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்' என்றும் தனது தந்தையின் பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அம்பேத்கர்என்ற பெயர் அவரது இயற்பெயர் என்று சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்கின்றன்.அந்த சுயவிவர கடிதமும் இந்த புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் நியூயார்க் நகரிலிருந்து லண்டன் செல்வதற்காக கடவுச்சீட்டு வேண்டி நியூயார்க் நகர பிரிட்டிஷ் தூதருக்கு அம்பேத்கர் தன் கைப்பட எழுதி அளித்த விண்ணப்பத்திலும் அம்பேத்கர் தனது பெயர் 'பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்' என்றும் தனது தந்தையின் பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்றும் குறிப்பிட்டுள்ளார். லண்டன் சென்ற பிறகு 1916இல் அக்டோபர் முதல் வாரத்தில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் என்ற பன்னாட்டு புகழ் பெற்ற பொருளாதார கல்வி நிறுவனத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் படிப்பதற்காக அம்பேத்கர் பதிவு செய்து கொண்டார். அந்த ஆவணங்களில் 1916 ஆம் ஆண்டு கல்வி நிறுவனத்தில் அம்பேத்கர் சேர்ந்தபோது அவர் எழுதிக்கொடுத்த விண்ணப்ப படிவம் ஒன்று அந்த விண்ணப்பத்தில் அம்பேத்கர் தன் கைப்பட நிரப்பியுள்ளார் கல்வி கட்டண 10 பவுன் செலுத்தியுள்ளார்.
விண்ணப்ப படிவத்தில் துணைப் பெயர் என்ற இடத்தில் அம்பேத்கர் என்றும் முழுப்பெயர் என்ற இடத்தில் பீமாராவ் ஆர் என்றும் எழுதியுள்ளார் .
துணைப் பெயர் என்பது அவரவர் தந்தையின் பெயர் ஆகவே இருக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் சமூக நடைமுறை ஆகும் .
எனவே அம்பேத்கர் என்ற பெயர் அம்பேத்கரின் தந்தையின் பெயரில் இருந்துதான் சேர்க்கப்பட்டது என்பது உறுதியாகிறது என்று இந்த நூல் கூறுகிறது.

Comments
Post a Comment