இம்மானுவேல் சேகரன் எனும் சகாப்தம்

 இம்மானுவேல் சேகரன் எனும் சகாப்தம்…


கபாலியில் ரஜினியை  கால்மேல் கால் போட்டு உட்காருவேன்டா என்ற வசனத்தை இயக்குநர் ரஞ்சித் பேசவைத்ததற்கு காரணமே ஒடுக்கப்பட்ட விடுதலைக்காகப் போராடிய இமானுவேல் சேகரன்தான்..


ஹிட்லரோட  மீசை மிக புகழ் பெற்ற ஒன்னு.அவருக்கு அப்புறம்  சார்லி சாப்லினும்,இம்மானுவேல் சேகரனும் இந்த மீசைக்கு புகழ் பெற்றவர்களாக  திகழ்கிறாங்க..



எங்கெல்லாம் அடக்குமுறைகள் நடக்குதோ  அங்கெல்லாம் ஒரு போராளி உருவாகுறான். தியாகி இமானுவேல் சேகரனும் அப்படித்தான்..சாதிய மேலாதிக்கத்த எதிர்த்துப் போராடாம இருப்பதற்கு பதிலா செத்து விடுவதே மேலானது என்ற  தத்துவத்துக்கு ஏற்ப சாதிய மேலாதிக்கத்தை எதிர்த்த சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரன்.இரட்டைக்குவளை முறையை எதிர்த்த மாபெரும் வீரன். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில கலந்துகொண்டு சிறை சென்ற வீரர்.தென் மாவட்ட மக்களோட  மாபெரும் தலைவராகவும் புரட்சியின் வழிகாட்டியாகவும் கொண்டாடப்படுகிற இமானுவேல் சேகரன், 1924 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செல்லூர் எனும் கிராமத்தில பிறந்தாரு..

இவரோட பெற்றோர் வேதநாயகம்,ஞானசுந்தரி அம்மையார்.இவரது தந்தையார் ஓர் ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் இருந்தாரு.தொடக்க கல்வியைத் தன்னோட தந்தையிடம் படிச்சாரு. அதுக்கு அப்புறம் பரமக்குடி பள்ளியில தன்னுடைய ஆரம்பக் கல்வியையும் படிச்சாரு. பள்ளிக் காலத்தில் சிறந்த கால்பந்து வீரராகவும் இம்மானுவேல் சேகரன்  திகழ்ந்தாரு.

இவர் அடக்குமுறைக்குட்பட்ட சமூகத்தில் பிறந்ததனால,  இன உரிமை பத்தி தனியா யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்ல.தேசம் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்தது போதாதென்று ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையானது இவரது சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது. இதைப்பார்த்த இமானுவேல்சேகரன் ஆங்கிலேயர் மேல கோபமும் சமூக நீதி உணர்வும் கொண்டவரா வளர்ந்தாரு.இதன் காரணமாகவே தனது பதினெட்டாவது வயதில் தந்தையுடன் இணைந்து வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் குதித்தாரு.1946 ஆம் ஆண்டு வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கிரேஸ் என்ற ஆசிரியையை திருமணம் செய்து கொண்டாரு. இவங்களுக்கு மேரி வசந்த ராணி பாப்பின் விஜய ராணிசூரிய சுந்தரி பிரபா ராணி மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய 4 பெண் பிள்ளைகள் பிறந்தனர்.

இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கத் துவங்கினாரு. இதன் விளைவாக சிறைக்கும் போனாரு. இவருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டணை வழங்கப்பட்டது.இந்திய சுதந்திரமே ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம் என கருதிய இவர் 1943ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் இவர் அவில்தார் ஆக பணியாற்றிட்டு இருந்தாரு.இதன் காரணமாக ஆங்கிலம்,ஹிந்தி உருசிய மொழி உட்பட 7 மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக திகழ்ந்தாரு.இமானுவேல் சேகரன் இராமநாதபுர வாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு நேரடியாக தன்னை சமூகப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கிட்டாரு..ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைக் கண்டு வெகுண்டெழுந்த இமானுவேல் சேகரன் 1952இல் இராணுவத்திலிருந்து விலகி ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினாரு.காமராசர் இமானுவேல் சேகரனை சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்ததும் அதனை ஏற்று காங்கிரஸில் இணைந்து கொண்டார். காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த ராஜாஜி, குலக் கல்வியை கொண்டு வந்த போது அதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினாரு சேகரன்.


தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால அரசுக்கு இழப்பு ஏற்பட்டதுனு சொல்லிகிட்டு, அந்த இழப்பை ஈடுகட்ட கிராமத்திலுள்ள பள்ளிகளை மூடனும்னு ராஜாஜி எடுத்த முடிவை இமானுவேல் சேகரன் வன்மையாகக் கண்டிச்சாரு.அது மட்டுமல்லாம கிறிஸ்தவப் பள்ளிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய போது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளே பள்ளி நோக்கி புறப்படுங்கள்னு ராமநாதபுரம் பரமக்குடி மற்றும் கமுதி வட்டாரங்களில் பிரச்சாரம் செஞ்சாரு. இன்னைக்கும் ராமநாதபுர மாவட்டத்துல கிறிஸ்துவ சபைக்கு சொந்தமான பள்ளிகள் இருக்குனா அதுக்கு இம்மானுவேல் சேகரனின் பங்களிப்பு தான்.ராமநாதபுரத்தில் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்ததப்பட்ட மாநாட்டில் சாதிகளுக்குள் இணக்கம்,விதவை மறுமணம் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினார்.1954ஆம் ஆண்டு இரட்டைக்குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தினார்.1956 இல் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் பங்கேற்பு மாநாட்டை நிகழ்த்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் ஆகவே மாறினாரு இம்மானுவேல் சேகரன்.ஒடுக்குமுறை தொடர்ந்தால் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவ நேரிடும் என்று  எச்சரிக்கையும் விடுத்தார். 1957களில் நடந்த சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக் கூட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் சார்பில் கலந்து ஆறு பேரில் இம்மானுவேல் சேகரனார் ஒருவராவார்.அந்தக் கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் முத்துராமலிங்கத் தேவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சசிவர்ணத் தேவரும் கலந்துகிட்டாங்க. கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என்ற பள்ளர் சமுதாய மக்களின் பிரிதிநிதித்துவம் குறித்து இம்மானுவேல் சேகரனுக்கும் தேவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் நடந்த மறுநாள் இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்த தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் மீது இம்மானுவேல் சேகரன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.  பின்னர் அவர் அந்தக் குற்றசாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். தியாகி இம்மானுவேல் சேகரனின் துணிவும், எதிர்ப்பு மனநிலையும், சுயமரியாதை உணர்வுமே அவரை இனைக்கும் மக்களின் இணையற்ற தலைவராக இருக்க காரணமாக அமைஞ்சி இருக்கு. இம்மானுவேல் சேகரனார் நினைவாக இந்திய அஞ்சல் துறை அக்டோபர் 9, 2010 அன்று அஞ்சல் தலை வெளியிட்டு அவரை கௌரவிச்சி இருக்கு.இன்னைக்கு வரைக்கும் அங்க சாதி ரீதியான பிரச்சனை வெடிக்கும் அப்டிங்கிறதால தான் இன்னைக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அக்டோபர் 30 ஆம் தேதி வரைக்கும் 144 தடை உத்தரவு போட்டு இருக்காங்க.. 

எப்பொழுது தான் நீங்கும் இந்த சாதியமும்,சாதிய உணர்வுகளும்.. 


                  ✍️-எழில்ஆதித்தமிழன்


Comments