குறத்தி முடுக்கு -புத்தக விமர்சனம்

புத்தகத்தின் பெயர் : குறத்தி முடுக்கு 
ஆசிரியர் : ஜி. நாகராஜன்

குறத்தி முடுக்கு ஒரு இடம் அல்ல ரத்தமும், நிலமும், சீழும், ஓயாமல் கசியும் ஆறாத ரணம்.  மும்பை காமாட்டிபுரா கொல்கத்தாவின் சோனா காட்சி போல தமிழ்நாட்டு திருநெல்வேலியில் ஜி நாகராஜன் கற்பனையாய் உருவாக்கிய விலை மாதர் தெரு தான் குறத்தி முடுக்கு...


குறத்தி முடுக்கின் பிரபாகத்தில் அழுது மூச்சு திணறும் பெண்கள் ஒரு புறம், சந்தர்ப்பவசத்தால்  சிக்கிக்கொண்டு கனவுக்கு பணத்தையும் கொடுத்து நீர் ஒட்டாத இலை போல வாழும் தங்கம் மறுபுறம், இருதரப்பையும் ஒரு மாயக்கோடு போல இணைக்கும் பத்திரிக்கையாளன் என்று மூன்று தரப்புகளின் சங்கமும் இந்த குரு நாவல்.

ஜி நாகராஜன் தனது கதை உலகத்தில் வரும் விலைமாதர்கள் தாங்கள் சந்திக்கும் சக மனிதர்களுக்கு துரோகம் செய்பவர்களாகவும் தன் உடலை முன்வைத்து அவள் செய்கிற பேரத்தையும், அவளது நிராகரிப்பையும், அவளது கள்ளத்தனத்தையும், அவளது சந்தோஷத்தையும்,அவளது கோபத்தையும், அவளது வருத்தத்தையும், அவளது நோன்புகளையும், அவளது கற்பனைகளையும், கலையுணர்வோடும் பாசாங்கு தன்மையில்லாமலும் எழுதி இருப்பதை இப்போது வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

"நாளை மற்றொரு நாளே" நாவலின் சிறப்பை விட குறத்தி முடுக்கு பல வழிகளிலும் சிறப்பம்சம் கொண்டது. இக்கதையில் ஆசிரியர் திருமணத்தை முன்வைத்து பல கேள்விகளை எழுப்புகிறார் குழந்தை பெற்று வளர்த்தெடுப்பதை விமர்சிக்கிறார்.

இக்கதையின் ஆசிரியர் புனை உலகத்தின் கதாபாத்திரங்கள் அன்றாட வாழ்வில் சகஜமாக நடமாடுகிறவர்கள், இருந்தபோதிலும் தனிமனித ஒழுங்கு சமூகத்தின் ஒழுங்கு என்ற இரு வேறு துருவங்களை அல்லது இரு வேறு நிலைகளைப் பிரிக்கும் கோடுகளைப் பற்றிய விவாதங்களை அப்பாத்திரங்களின் மூலமாகவும் அவர்கள் சந்திக்கும் சம்பவங்கள் மூலமாகவும் விவாதத்திற்குள் கொண்டு வருகிறார்.

லாட்டரி சீட்டு விற்பவர்கள், பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள், தெருவோரத்தில் இட்லி கடை வைத்திருக்கும் பெண்கள், ரிக்ஷா தொழிலாளிகள் அன்றாட தேவைகளுக்காக சிறிதும் பெரிதுமாக ஏமாற்றி வாழும் ஜனங்கள் இவர்கள்தான் ஜீ நாகராஜனின் கதை உலக பாத்திரங்களாக இருக்கின்றன.

ஜி.நாகராஜனின் இந்நாவலில், என்ன தொழில் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பிறந்து வளருகின்ற தொழில்தான் செய்கிறேன் என்கிற உரையாடல் இடம்பெற்றிருக்கிறது. இந்த வார்த்தையை கதையில் வரும் பத்திரிகையாளர் ஒருவர் விலைமாதரிடம் சொல்கிறார்.

குறத்தி முடுக்கு என்கிற நீல்கதையில் தங்கம், நடராஜன்,மரகதம்,தேவயானை, செண்பகம் என்கிற கதாபாத்திரங்களோடு பத்திரிக்கையாளர் ஒருவரும் வருகிறார்.

 தங்கமும் நடராஜனும் கணவன் மனைவி. நடராஜன் தனது மனைவி தங்கத்தின் பேராசையால் வங்கியில் கையாடல் செய்துவிட்டு சிறைக்கு செல்ல நேரிடுகிறது .இதன் காரணமாக தங்கமும் நடராஜனும் குறத்தி முடுக்கு வந்து சேர்கிறார்கள். தங்கம் விலைமாதராகவும் நடராஜன் அத்தானாகவும் மாறுகிறார்கள். நடராஜன் அடுத்தவர்களை ஏமாற்றி வாழும் வாழ்க்கையை அல்லது ஏமாற்றும் கலையை மேற்கொள்கிறான். தங்கத்திடம் தனது காமத்தையும் தணிக்கும் பொருட்டு சந்திக்கும் பத்திரிகையாளர் ஒருவர் காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தங்கத்தை பத்திரிக்கையாளர் நடராஜனின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளும் ஏற்பாட்டுக்கு சென்று விடுகிறார். பத்திரிக்கையாளருடைய துரதிருஷ்டவசம் அவர்களது திருமணம் நடைபெறாமல் போய்விடுகிறது. தங்கத்தை போலீஸ் பிடித்து சென்று விடுகிறது. தங்கத்திற்காக பத்திரிகையாளர் கோர்ட்டில் சாட்சி சொல்கிறார். தங்கம் விடுவிக்கப்படுகிறார். பத்திரிக்கையாளர் இடம் மாறுதல் தேவை என்று தனது தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கிறார். தங்கம் திருவனந்தபுரத்திற்கு சென்று குடும்ப வாழ்க்கையை மேற்கொள்கிறார். பணி நிமித்தமாக திருவனந்தபுரத்திற்கு செல்லும் பத்திரிக்கையாளர் தங்கத்தையும் நடராஜனையும் சந்திக்கிறார். அவர்களது கூலி வாழ்க்கையையும் குறத்தி முடுக்கில் தங்கம் அலங்காரத்துடன் இருந்ததையும் நினைத்துக் கொள்கிறார்.குறத்தி முடுக்கு கதையில் செண்பகத்தின் கதையும், தேவையானையின் கதையும் நெகிழ்ச்சியானது.

 செண்பகம் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.  குறத்தி முடுக்கில் இருக்கும் மற்ற பெண்கள் அவளை வட்டதெரு வைத்தியரிடம் சென்று கருவை கலைக்க சொல்கின்றனர். செண்பகம் மறுத்துவிடுகிறார். இச்சூழலில் செண்பகத்திடம் வாடிக்கைகொள்ள ஒருவர் வருகிறார்.தனது இச்சையை தீர்த்துக் கொள்கிறார். அப்போது அவளது வேதனையை சில வார்த்தைகளில் வாசகனுக்கு தெளிவு படுத்துகிறார் ஜி நாகராஜன்.

தனது வயிற்றில் குழந்தை இருப்பதாகவும் பக்குவமாக நடந்து கொள்ளும் படியாகவும் கெஞ்சுகிறாள். வந்திருப்பவர் அவளை திட்டுகிறார். ஐந்து நிமிட நிவாரணத்திற்குப் பிறகு அவர் சென்று விடுகிறார். செண்பகம் வயிற்று நோவுடன் மாடியில் இருக்கும் தனியறைக்கு மாற்றப்படுகிறார்.

இதேபோல் தேவையானை பற்றிய ஒரு நிகழ்வு அவள் தற்கொலை செய்து கொள்ள முயலும் போது கூட ஒரு ஆணின் இச்சைக்கு தன்னை கொடுத்து விட்டு தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டும் என்கிற சூழல்.

அப்படியான தற்கொலையில் அவளுக்கு விடுதலை கிடைக்கவில்லை. தேவையானை தூக்கில் தொங்க வேண்டும் என்று கட்டிலில் ஏறி மேல் வலயத்தில் கயிறின் நுனியை தொங்கவிடுவதும், கயிறு சரியாக பொருந்தாமல்  அவள் கீழே விழுந்து முகத்திலும் இடுப்பிலுமாக அடிபட்டு கிடக்க நேரிடுகிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களின் வாயிலாக குறத்தி முடுக்கு பெண்களின் வேதனைகளையும் விசித்திரமான அனுபவங்களையும் ஜி நாகராஜன் சொல்கிறார்.

குறத்தி முடுக்கில் வாழும் பெண்களின் காதல் அவர்களது ஆழ்மனத்தில் இருக்கும் வேதனைகள் புலம்பல்கள் அன்றாட வாழ்வின் சித்திரங்கள் இப்படியாக இந்த 40 பக்கமும் நகர்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வது என்பது  தவிர்க்க இயலாத ஒன்று அதை தவிர்க்கும் அறிவு ஜீவிகளின் மனப்போராட்டங்களை பற்றி கதைகளும் சினிமாக்களும் ஏராளமாக வந்திருக்கின்றனர். பத்திரிக்கையாளர் குழந்தை பெற்று வளர்த்திருப்பதை கேலி செய்கிறார்.தினமும் வாடகைக்கு சைக்கிள் வாங்கி ஓட்டுவதை விட சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்கிக் கொள்வது நல்லது என்று நினைத்துக் கொள்பவர். இந்த உவமானம் ஒரு பெண்ணாக இருக்கிறது.  இதன் பொருட்டே குறத்தி முடுக்கிற்கு சென்று தங்கத்தின் மேல் வழக்கம் போல மத்திய வகுப்பு சாமானியர்கள் கொள்ளும் காதலை ஏற்படுத்திக் கொள்கிறார். பெண்ணை கையகப்படுத்திக் கொள்ளும் ஆண் மனோபாவம் ஆகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தங்கத்தை ஒருமுறை சந்திக்க வரும் பத்திரிகையாளர் சற்று தாமதமாக வர நேரிடுகிறது. அப்போது தங்கத்தின் வீட்டில் இருந்து வேறொரு ஆள் வெளியேறுகிறார். தங்கம் அந்த ஆளை அத்தானை பார்க்க வந்தவர் என்றும் தன்னைப் பார்க்க வந்தவர் இல்லை என்றும் பத்திரிகையாளரிடம் சொல்கிறார்.

 ஜி நாகராஜன் குறிப்பிடுகிற இந்த இடம் காலம் காலமாக இந்திய ஆண்கள் தங்களது நிலத்தை, பணத்தை, வீட்டை, சொத்தை, உடைமைகளை, தங்களது பெயரில் தங்களது வசத்தில் வைத்திருப்பது போலத்தான் பெண்ணையும் வைத்து இருக்கிறார்கள் என்பதை சொல்கிறது.குறத்தி முடுக்கு மறைமுகமாக உணர்த்துவது இதனைத் தான்.
 
ஜி நாகராஜனின் மொத்த உலகமே இப்படியாக இருக்கிறது. ஏன் இவ்வுலகை அவர் தேர்வு செய்தார். இதை தொடர்ந்து எழுத வேண்டியதன் அவசியமும் தேவையையும் என்ன அவர் வாழ்ந்த இதே காலகட்டத்தில் எழுதிய எழுத்தாளர்கள் பலரும் எழுதி தள்ளியது.   அவரது புனை உலகத்தில் வரும் அடித்தட்டு மக்களைப் பற்றிய சித்திரங்களைத் தவிர பிற மனிதர்களைப் பற்றிய வரைகோடுகள் என்ன அவர்களைப் பற்றி ஜி நாகராஜன் என்ன கருதுகிறார் என்று பல கேள்விகளை இந்நாவல் நம்மிடம் எழுப்புகிறது.

                               -✍️எழில்ஆதித்தமிழன்

Comments