கரைந்த நிழல்கள் (புத்தக விமர்சனம்)

புத்தகத்தின் பெயர் : கரைந்த நிழல்கள்
ஆசிரியர் : அசோகமித்திரன்


சினிமா என்பது நம்மிடையே திருவிழாவாக பார்க்கப்படுகிற ஒன்று.நம்முடைய அன்றாட வாழ்வில் களைப்பில் திணறும் சாமானிய மனிதனுக்காக கொண்டாட்டமா சினிமா திகழ்கிறது.திரையில் ஜொலிக்கும் நாயகன் ஒரு சாமானியனுக்கு தலைவனாக கடவுளாக இருக்கிறான்.அரசியல் சிம்மாசனத்தின் பெரும் இடத்தை சினிமாக்காரர்கள் தான்,அதாவது  சினிமா நட்சத்திரங்கள் தான் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர்.இப்படி சினிமாவில் நடிக்கும் நாயகனுக்கும்,நாயகிக்கும் நாம் பாலாபிஷேகம், பெரிய,பெரிய சுவரொட்டிகள் இவை எல்லாம் வைத்துக் கொண்டிருக்கும்,இந்த காலகட்டத்திலும் திரைக்குப்பின் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களை நாம் நினைத்து கூட பார்க்க மாட்டோம்.காரணம்,அவர்கள் திரையில் வரவில்லை.திரைக்குப் பின்னால் தானே இருக்கிறார்கள்.அப்படி திரைக்குப் பின்னால் இருக்கும் ஊழியர்களின் வாழ்வும்,வாழ்வியலும் விளக்கமாக கூறுகிறது கரைந்த நிழல்கள் என்கிற இந்த நாவல்... இது ஒரு நல்ல நாவல் என்றில்லாமல் இது சினிமாத்துறை பற்றிய ஒரு நல்ல நாவல் அப்படி என்று சொல்லலாம்...




கரைந்த நிழல்கள் பத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ராம் நாராயணன் 2007 ஆம் ஆண்டு நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஸ்டார்-கிராஸ்ட் என்ற பெயரில் வெளிவந்தது.இந்த பதிப்பில் வரும் ஒவ்வொரு அத்தியாயமும் கதாபாத்திரங்களும் பெயர்களால் தலைப்பிடப்பட்டிருக்கும். இதில் வரும் 10 கதாபாத்திரங்களும் வெவ்வேறு பத்து கதைகள்.சினிமா எனும் பின்னணியில் உள்ள பாத்திரங்களுக்கிடையான உறவுகளால் கச்சிதமாக பிணைக்கப்பட்டு உருவாக்கிய ஒரு நாவல்கரைந்த நிழல்கள்…
நடராஜன் உறங்கிக் கொண்டிருக்கும் போது அம்மா,மனைவி மூன்று குழந்தைகளை தொந்தரவு செய்யாமல் எழுந்து சென்று கேமரா மேன், கேமரா அசிஸ்டன்ட், டான்ஸ் மாஸ்டர்,நடன பெண்கள்,டைலர்,டைரக்டர்,மேக்கப் ஆர்டிஸ்ட்,இப்படி அனைவரையும் ஒருங்கிணைத்து வேண்டிய முன்னேற்பாடுகள் செய்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு போகும் பொழுது நடராஜன் அசந்து உறங்குவதாக முதல் அத்தியாயம் முடிகிறது.
ஏறக்குறைய 40 கதாபாத்திரங்கள் முதல் அத்தியாயத்தில் வருகிறார்கள் சுமார் 100 பாத்திரங்கள் நாவலில் வலம் வருகிறார்.நடராஜன் விழித்து அவுட்டோர் சூட்டிங்கிற்கு தயாராகும் நடராஜனிடமிருந்து நாவல் துவங்கி, கால் வீங்கி நடக்கவும் முடியாமல் கண்ணும் தெரியாமல் கிட்டத்தட்ட பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நடராஜன் வீழ்ச்சியில் நிறைவு பெறுகிறது. திறமை இருந்தும்,அனுபவம் இருந்தும் சினிமா அவரை வீழ்த்துகிறது.

முதலாளி ரெட்டியார் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருப்பவர்.ஆத்திரம், கோபம்,கவலை என மூச்சு முட்ட திரிபவர்.ஆனால் அவருக்கு மென்மையான மனது.ஐயந்சந்திரிகாவினால்,பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் ரெட்டியார்,அவளை நேரடியாக சந்திக்கிறார்.ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள்.உனது பாவாடையை தூக்கி பரிசோதித்துப் பார்க்கும் அவகாசம் எனக்கு இல்லை என கோபத்தில் ஆவேசமாக பேசுகிறார். பின்பு சில நிமிடங்களில் மனமிறங்கி இதற்கெல்லாம் பெருசா வருத்தப்பட்டு கொள்ளாதே பாப்பா என்று கூறுகிறார்..

சம்பத் ராஜ் கோபாலிடம் நடந்து கொள்ளும் விதம் முன்பு ஒரு மாதிரியும் சந்திரிகா கிரேஷனில் இருந்து வெளியேறிய பின்பு வேறொன்று ஆகவும் இருக்கிறது. ராஜகோபாலிடம் நெருக்கமாக சிட்டி பேசினாலும் அவனது நடவடிக்கை அதற்கு எதிராக இருக்கிறது. இதை உணர்ந்துதான் ராஜகோபாலன் அவனுடன் பழகுகிறார். நான்கு மாதங்களாக ஒரு வேலையும் இல்லாமல் குச்சியால் தனது துணியை எடுத்து எரியும் அண்ணன், பழைய சோற்றை போடும் அண்ணி, இப்படி அவமானங்களில் சுழலும் இணை இயக்குனரான ராஜகோபால் வாய்ப்பு தேடி செல்கிறார்.தேடிச் செல்லும் போது பசிக்கிறது. சின்ன வாழைப்பழம் ஆனாலும் பத்து பைசா சொன்னான் சோடா கடைக்காரன்.ஜெகன்நாத்ராவ் வீட்டில் சாப்பிட்டிருக்கலாம்.ஆனால் அங்கே சாப்பிடுவதற்கு என்று காத்திருந்து விட்டால் அப்புறம் கிளம்பி வடபழனி வர மத்தியானத்துக்கு மேலாகிவிடும். ராஜகோபாலுக்கு இனியும் வாய் தங்குவது தாங்க முடியவில்லை. அவனுக்கு அன்றைய தினத்தின் முதல் சிகரெட் ஆகிய அந்த சார்மினாரின் முரட்டு கசப்பு புகை ஒரு அமைதியை தந்தது..

நாவலின் இறுதி அத்தியாயத்தில் வேலுவும்,சண்முகமும் அவனது உடைக்கு இஸ்திரி போடுவது,பாத்திரம் கழுவுவது என பணிவிடைகள் செய்கிறார்கள். தரையில் இலை போட்டு மூடி வைத்திருந்த இட்லி குவியல் அவன் கண்ணிலேயே படாதது மாதிரி சண்முகம் இருக்க வேண்டும்.ஆனால் அவன் கண் அடிக்கடி அந்த பக்கம் போகத்தான் செய்தது என்று ஆசிரியர் கூறுகிறார்.சந்திரா கிரியேஷன்ஸின் வீழ்ச்சியை சொல்லும் ஏழாவது அத்தியாயத்தில் இறுதிப் பகுதி துயரத்தின் உச்சம்.  
அதிக பொருட்செலவை கூறும் அரிய காட்சிகளை அயல் சினிமாவிலிருந்து கத்தரித்து அதை இங்கு இணைத்துக் கொள்ளும் வழக்கம் அப்போது இருந்திருக்கிறது. அதை ஒரு தொழிலாகவே பலரும் மேற்கொண்டு இருந்திருக்கின்றனர். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது அதற்கெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டது.வேஸ்ட் பிலிம் வியாபாரம் தமிழ் படங்கள் தமிழர்கள் தயாரிக்கும் இந்தி படங்களை வெளியிட தடை கூறி வடக்கே போராட்டம் நடைபெற்றது. இன்றைக்கு எதிரான நமது அரசியல் என தற்போதைய சூழலில் புரிந்து கொள்வதற்கான 60-களில் சினிமா குறித்து சென்னை பற்றிய ஆவணமாகவும் இருக்கிறது.இந்நாவலில் ஒவ்வொரு பாத்திரமும் முன்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு அடுத்தடுத்து அத்தியாயங்களில் துவக்கம் பெறுகின்றது.
இப்படி பல கதாபாத்திரங்களுடன் பயணித்து கொண்டிருக்கிறது இந்த நாவல்.சினிமா துறையில்  திரைக்குப் பின்னால் வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்களின் பல கஷ்டங்களையும், அவர்களின் மனக்குமுறல்களையும் நாவல் எடுத்துரைக்கிறது. ஸ்டண்ட் நடிகர்கள்,கார் ஓட்டிகள்,லைட் பாய்ஸ்,கதா மாந்தர்களாக வருகின்றனர். அவர்கள் அன்றாட வேலையில் எதிர்கொள்ளும் சிரமங்கள்,பாதுகாப்பாற்ற வேலைகள், குடும்ப வாழ்க்கை இவற்றையெல்லாம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றது. ஸ்டுடியோ ஊழியர்களை கதாபாத்திரங்களாக கொண்ட கரைந்த நிழல்கள் நாவல் குறிப்பிடத்தக்கது... 
ஒவ்வொரு நடிகர்கள்,நடிகைகளின் திரைப்படங்களை ஒன்று விடாமல் முதல் நாளிலேயே பார்க்கும் நாம், திரைக்குப் பின்னால் வேலை செய்யும் பல ஊழியர்களின் கஷ்டங்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் என்றாவது யோசித்துப் பார்த்திருப்போமா..? இனியாவது திரைப்படங்களை பார்க்கும் பொழுது நடிகர் நடிகைகளை மட்டும் பார்க்காமல் அதற்கு பின்னால் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களையும் நாம் நடிகர்கள்,நடிகைகளாக பார்ப்பதற்கு கரைந்த நிழல்கள் ஒரு துருப்புச் சீட்டு…

                   ✍️ எழில் ஆதித்தமிழன்

Comments