முத்தம்மா ஆயா
முத்தம்மா ஆயா
அடுப்புல வெந்துகிட்டு இருந்த சோத்துச் சட்டிய கிண்டிக்கிட்டே இருந்தா மலையம்மா. காசு குடு, காசு குடுன்னு அன்பு நச்சரிச்சிகிட்டே இருந்தான். காசு கீசு எல்லாம் ஒன்னும் தர முடியாதுன்னு சோத்தை எடுத்து வடிச்சிட்டு, குழம்பு சட்டியை எடுத்து அடுப்புல வச்சா மலையம்மா. அன்பு காசு கொடுன்னு கத்திக்கிட்டு இருந்தான். இது என்ன வம்பு புடிச்சவனா இருக்கு, இல்லன்னு சொன்னா உடுதா பாரு, கத்திகிட்டே இருக்குன்னு சொல்லி, கடுகு டப்பாவில கைய விட்டு துலாவிட்டு இருந்தா மலையம்மா. காசு தான் எடுக்குறாங்கனு அன்பு கொஞ்ச நேரம் அமைதியா இருந்தான். ரொம்ப வருஷமா தேடுன புதையல் கிடைச்சா மாதிரி பெருமூச்சுவிட்டு, டப்பாவில் இருந்த நாலு அஞ்சி கடுகை எடுத்து சட்டியில போட்டு குழம்பு ஊத்தி கிண்டிக்கிட்டு இருந்தா மலையம்மா. அது வரைக்கும் அமைதியா இருந்த அன்பு மறுபடியும் அழ ஆரம்பிச்சிட்டான். கோபப்பட்ட மலையம்மா அடுப்பு எரிக்க வச்சிருந்த குச்சியை எடுத்து அன்பு காலு மேல ஒன்னு வச்சது. அவ்வளவுதான் அன்பு தரையில் புரண்டு அழ ஆரம்பிச்சிட்டான். எவ்ளோ நிறுத்த முயற்சி பண்ணியும் அவன் கேட்கிற மாதிரி இல்ல. சனிய நல்ல நாள் அதுமா எப்படி அழுது பாரு. எழுந்துரு சனியனே கோவிலுக்கு சாமி பார்க்க போனவங்க வந்து காரி துப்ப போறாங்கன்னு, புலம்பிட்டு இருந்தா. உன் கூட என்னால லம்படிக்க முடியாது சாமி பார்த்துட்டு வர்றவங்களுக்கு நான் சோறாக்கி போடணும். இப்படியே பண்ணிட்டு இருந்தா உன் அப்பன் கிட்ட இன்னும் பூச தான் கிடைக்கும் . ஒழுங்கா போய் சேருன்னு சொல்லிட்டு இருந்தா. ஆனா அன்பு மலையம்மா பேசுறது எல்லாம் காதலியே வாங்காம புரண்டு புரண்டு அழுதுகிட்டே இருந்தான்.
அந்த நேரம் தான் 100 நாள் வேலைக்கு போயிட்டு முத்தம்மா ஆயா வந்தா. அன்பு அழுவுறத பார்த்துட்டு இடுப்புல இருந்த அன்னகூடய கீழே எறக்கி வச்சுட்டு. என் தங்க புள்ளைய யாரு அடிச்சா, என் சவரத்துக்கு என்ன ஆச்சுன்னு அன்பு கண்ணை தொடச்சி விட்டுகிட்டு மடியில உட்கார வச்சு கேட்டுட்டு இருந்தா முத்தம்மா. ஆயா அம்மா கிட்ட காசு கேட்டேன். அதுக்கு அடிச்சிடுச்சுனு அழுதுட்டு சொன்னான் அன்பு.
எவடி இவ கூறுகெட்டவ. குழந்தையை போயிட்டு அடிச்சி இருக்கான்னு மலையம்மாவ திட்ட ஆரம்பிச்சா முத்தம்மா. பேரனுன்னா அவ்வளவு உசுரு அவளுக்கு. அதான் பேரனுக்கு ஒண்ணுன்னு வந்தா உடனே பொங்கிடுவா.
உடனே மலையம்மா, ஆமா உன் புள்ள பணம் காய்க்கிற மரத்தை ஊட்டு பின்னால நட்டு வச்சி இருக்காரு. இவன் கேட்கிறப்ப எல்லாம் அறுத்து அறுத்து தர்றதுக்குனு, குழம்பு சட்டியை அடுப்பில இருந்து எறக்கி வச்சி உள்ள போனா. அதுக்கு குழந்தைய போட்டு அடிப்பியாடி இன்னொரு தடவை புள்ள மேல கைய வெச்சா அவ்வளவு தான் சொல்லிட்டேன்னு, அன்ப தூக்கிக்கிட்டு ஊட்டு முன்னாடி இருந்த திண்ணையில உட்கார்ந்தா.
ஆயா காசு வாங்கி கொடுனு அன்பு கேட்க, அவளுடைய கிழிஞ்ச முந்தானைல கிழியாம வச்சிருந்த பத்து ரூபாய் நோட்டை எடுத்து அன்பு கிட்ட கொடுத்தா முத்தம்மா. இந்த நைனா எடுத்துட்டு போயி என்ன வேணுமோ வாங்கிக்கோன்னு சொன்னா. அன்புக்கு ஒரே குஷி. ஆயான்னா .. ஆயாதான்னு.. சொல்லி ஒரே ஓட்டம் ஓடிட்டான்.
ஆமா ஏழு கழுதை வயசாகுது இன்னும் அவனுக்கு நீ காசு குடுத்துட்டு இரு. ஆனா வீட்டு செலவுக்கு காசு கேட்டா.என்கிட்ட எங்க இருக்குன்னு அப்படியே நீலிக்கண்ணீர் வடிப்பனு மலையம்மா சொன்னா . சும்மா வேலைய பாருடி அவனுக்கு எவ்ளோ வயசு ஆனாலும், அவனுக்கு கொழந்தை பொறந்தா கூட அவன் எனக்கு கொழந்தை தான்னு, சொல்லிட்டு அன்னக்கூடைய எடுத்துக்கிட்டு கொழாவில் கழுவ போனா முத்தம்மா.
சாமி பார்க்க போன சொந்தக்காரங்க எல்லாம் வீட்டுக்கு வந்துட்டாங்க. எல்லாரும் ஒன்னா சேர்ந்து சாப்பிட்டுடு, ராத்திரி சாமி ஊர்வலம் வர்றதுக்காக கிளம்பிட்டு இருந்தாங்க. ஆனா முத்தம்மா மட்டும், அன்பை எழுப்பி குளிப்பாட்டி, புது துணி எல்லாம் போட்டுட்டு இருந்தா. எல்லாம் சொந்தக்காரங்களும் தயாரா இருந்தாங்க. சாமியும் வந்துச்சி. பக்கத்து வீட்டு வாசல்ல வந்து இருந்துச்சு சாமி. பார்க்க அவ்வளவு அழகான காட்சி. அந்த திருப்பதி ஏழுமலையானே வந்து இருக்க மாதிரி டிராக்டர் மேல பூ எல்லாம் வச்சி நல்லா ஜோடிச்சி இருக்காங்க. ஜனங்க கொடுக்கிற அர்ச்சனை தட்ட டிராக்டர் மேல ஒக்காந்துட்டு இருக்க ஐயரு அர்ச்சனை பண்ணி தேங்காய் ஒடச்சி. கொடுப்பார். அதுக்கு முன்னாடி பசங்க எல்லாம் ஆட்டம் போட்டுட்டு இருப்பாங்க. பாதி ஊர்ல திருவிழா நடக்கிறதே இப்படி ஆட்டம் போடத் தானே. முத்தமா ஆயா வீட்டு வாசல்ல சாமி வந்து நின்னுச்சு அர்ச்சனை தட்ட ஐயர் கிட்ட கொடுத்தா மலையம்மா. எல்லாரும் கண்ண மூடி சாமி கும்பிட்டாங்க. அப்புறம் அர்ச்சனை தட்ட வாங்கிட்டு உள்ள போய்ட்டாங்க. அதோட ஆட்டம் பாட்டம் எல்லாம் காலையில உறிடி, கபடி நடக்கும்போது தான்.
எல்லாரும் பெருமாள் கோயில் இருக்க இடத்துக்கு வந்துட்டாங்க. உறிடி அடிக்கிறதுக்கு ஆணு,பொண்ணுனு எல்லா போட்டி போட்டாங்க. முத்தம்மா ஆயா தான் மைக் புடிச்சு கமெண்டரி குடுக்கும். ஹே அப்படி போ..இப்படி போ.. நல்லா பாரு.. நேரா போ.. அங்க இருக்கு அத அடி ... அப்படின்னு நல்லா நகைச்சுவையா பேசும். ஊர்ல இருக்க பசங்க, பொண்ணுங்க, அம்மாங்க எல்லாருக்கும் ஆயா மைக் புடிச்சி பேசுனா தான் புடிக்கும். அப்படி எல்லரையும் அதோட பேச்சால மயக்கி வச்சி இருக்கு ஆயா..
கபடி போட்டிக்கும் ஆயாதான் கமெண்டரி சொல்லும். சில டைம் பாட்டு கூட பாடும். அன்புக்கு ஆயா சொல்ற கமெண்ட்ரில கபடி ஆடணும்னு ரொம்ப ஆசை. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையால அவனால கபடி ஆட முடியல. ரொம்பவே வருத்தப்படுவான். ஆயா கிட்ட போய் சொல்லி அழுவான். என்ன ஆயா இப்படி ஆகுது.திருவிழா நடக்கும்போது எல்லாம் எனக்கு அடிபடுது.. கபடி ஆடவே முடியவில்லைனு சொல்லுவான். விடு நைனா அடுத்த வருஷம் பாத்துக்கலாம், வருஷத்துக்கு ஒரு நாள் தான் இப்படி இருக்கும் முடிஞ்ச ஒடனே எல்லாம் எப்பவும் இருக்குற மாதிரி அவங்க அவங்க வேலையை பார்ப்பாங்க.இப்படி முத்தம்மா ஆயா பேசிகிட்டே இருக்க அன்பு அப்படியே தூங்கிட்டான்.
திருவிழாவும் முடிஞ்சு போச்சு அடுத்த நாள் வேலையை பார்க்க ஜனங்கள் போயிட்டாங்க. அப்படியே நாள் கடந்து போச்சு. மறுபடியும் புரட்டாசி மாசம் பெருமாள் கோவில் திருவிழா வந்துச்சு. கபடி போட்டி நடந்துச்சு. அப்போ அன்புக்கு அடி படல..மைக்ல் முத்தம்மா ஆயா பேரன் அன்பு களத்துக்கு வரப் போறான்னு கூப்பிட்டாங்க. அன்பும் கபடி களத்தில போய், போட்டியில் வின் பண்ணி கோப்பையை கையில புடிச்சு கெத்தா நின்னா. ஆனா அதை பார்க்க முத்தம்மா ஆயா தான் இல்லை. கபடி போட்டிய நடத்துனது முத்தம்மா ஆயா நினைவு கோப்பை பேர்ல தான்.....
-எழில்ஆதித்தமிழன்

Comments
Post a Comment