கோபல்ல கிராமம்-கி.ரா
புத்தகத்தின் பெயர் : கோபல்ல கிராமம்
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
இதுவரைக்கும் யாரும் எழுதப்படாத ஒரு நாவல்.ஒரு தனித்துவமான படைப்பு. கதை மாந்தர்களில் ஒருவர் நூலுக்குள்ளிலிருந்து வெளியேறி கோபல்ல கிராமத்தை வாசிக்க நேர்ந்தால் இந்த நூலின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு அம்சமும் அவருக்கு புரியாமல் போகாது. தீவிர வாசகனுக்கான உள்ளோட்டமும் மேலோட்டமான வாசிப்புக்கும் உகந்த எளிமையும் உள்ள அபூர்வமான வசீகரம் கொண்ட எழுத்து, வாசிப்பவனின் தோல் மீது கை போட்டுக்கொண்டு இயல்பான குரலில் பேசும் .
துலுக்க ராஜாவுக்கு அஞ்சி தெற்கு நோக்கி ஓடி வரும் தெலுங்கு குடும்பம் கோபல்லம் என்ற புதிய கிராமத்தை உருவாக்கி வாழ்ந்து வரும் காலம். ஊருக்கு வெளியில் உள்ள ஊருணியில் ஒரு கொலை நடந்து விடுகிறது. கொலைகாரனை விசாரித்து கழுவேற்றுகிறார்கள். இதற்குப் பிறகு பாரதம் முழுக்க பரவிய ஆங்கிலேயர் கோபல்ல கிராமத்திற்கும் வருகிறார்கள். இவை நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே கோட்டையார் குடும்பத்தின் மூத்த ஜீவனான மங்கத்தாயார் என்கிற பாட்டியின் நினைவு கூறலாக பூர்வ கதை விரிகிறது.
ராஜாவிடம் இருந்து தப்பி ஓடிவரும் வழியில் மங்கத்தாயாருவின் குடும்பத்தை நதியின் மறு கரை சேர்ப்பதற்கு,கிளை வளைந்து ஏந்தும் எதிர்கரை அரச மரமும்,இவர்கள் ஒரு கோவிலுக்குள் பதுங்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் பெண் தெய்வம் ஒன்று அடைக்கலம் தருவதும், இவர்களை தேடி வந்த குதிரை வீரர்களின் எதிரில் இருந்தும்,அவர்கள் பார்வைக்கு இவர்கள் தட்டுப்படாமல் போவதும்,வேறொரு துலுக்க ராஜாவின் துரத்தலுக்கு அஞ்சி ஓடும், துளசி என்ற சிறு பெண்ணை பூமி பிளந்து விழுங்குவதும் கிராமத்தை நிறுவுவதற்காக காட்டை எரிக்கும் சந்தர்ப்பத்தில் சுத்த கட்டியில செய்ததைப் போல வெள்ளியின் நிறத்தில் கை பருமனும் ஒன்றரை பாகம் நீளம் உள்ளதாக வெளியே வந்து ஓடும் பாம்பு, நடத்தியலின் தர்க்கத்துக்கு அப்பால் நடப்பது என்றாலும் கதையோட்டத்தில் ஈர்ப்பில் இவற்றை எதையுமே நம்புவதற்கு தயக்கமில்லை வாசகனுக்கு…..
கதை மாந்தருடன் படைப்பாளிக்கு எவ்வளவு நெருக்கமும் வாஞ்சையும் இருக்கிறதோ அதே அளவு நெருக்கம் தான் வாசகனுக்கும் கதை மாந்தர்களுக்கும் இந்த நெருக்கம் வெளிப்படையாக தெரிவது அல்ல. ஆசிரியரின் புகாரற்ற விவரிப்பின் வழியாகவும் ஒருவருக்கொருவர் கொள்ளும் நேசத்தின் வழியாகவும் மௌனமாக தொற்றும் உண்மையில் விவரிக்கப்பட்டிருப்பது கோபல்லம் என்ற கிராமத்தின் கதை என்பதை விட மங்கத்தாயாருவின் குடும்ப கதை என்று நாம் சொல்ல வேண்டும்.
இந்த குடும்பத்துக்கும் கிராமத்தில் குடியமர்த்தப்படும் தச்சர்கள் கொல்லர்கள் போன்ற பிற சாதிகளுக்கும் உள்ள உறவு நிலைகள் விவரிக்கப்படவில்லை. அவ்வாறு விவரிக்கப்படும் போது இந்த குடும்பத்தின் இன்னொரு முகம் தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போது கதையின் போக்கு வேறு திசையில் நகர்ந்து ஆழம் பெறவும் வாய்ப்புண்டு. இன்றைய பின்னோக்கிய பார்வையில் தமிழ் நாவல் வந்து சேர்ந்திருக்கும் இடத்தை முன்னிட்டு நாவலின் இலக்கணம் எனக்குள் மாறி இருக்கிறது. ஹீராவின் பிற படைப்புகளில் இருந்தும் தனித்துவமான படைப்பு இது.
-எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment