கடல்புரத்தில்
புத்தகத்தின் பெயர்: கடல்புரத்தில்
ஆசிரியர்: வண்ணநிலவன்
ஒரு எளிய மீனவ குடும்பத்தை பற்றியாதாக தொடங்கும் இந்த கதை, முடியும் தருவாயில அக்குடும்பம் வசிக்கும் கிராமத்தையும், அது அமைந்திருக்கும் அகண்ட கரையையும் அதற்கப்பால் கண்ணுக்கெட்டாத தூரத்தில் விரிந்துகிடக்கும் கடலை பற்றின கதையாகவும் பெருகிவிடுகிற மாயம் எவ்வித பிராசையுமின்றி இயல்பாகவே நிகழ்கிறது.
இது கடல்புரத்தை குறித்த கதை மட்டுமல்ல, கடலை பின்புலமாகக் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும் பழமைக்கும் புதுமைக்கும் தந்தைக்கும் மகனுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பிற்கும் பகைக்கும் உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை அவற்றில் விழுந்து விடுகிற முடிச்சுகளை அவற்றை அவிழ்க்க முயன்று தோற்று அலைகழிகிற மனதின் பாடுகளை ஆதாரத்துடன் பேசுகிறது..
சென்னை போன்ற பெருநகரங்கள்ல,மூச்சு முட்டும் நெருக்கடியான வாழ்க்கையைப் வாழ்றவங்க, ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் தூத்துக்குடிபக்கத்துல இடம்பெயர்ந்து வாழ்ந்தால் அங்க கிடைக்கும் அனுபவங்கள் இந்த நாவல் முழுவதும் வாக்கியங்களால காட்சிப்படுத்தப் பட்டிருக்கு .
இந்த நாவல வாசிச்சு முடிச்சதும், “நல்லாத்தாம்ல இருக்கு” னு அந்த பாஷை தானாவே வந்து விழுறத தவிர்க்க முடியாது.
க்ரூஸ் மிக்கேல், மரியம்மை, பிலோமினா, செபஸ்தியன், அமலோற்பவம், சாமிதாஸ், ரஞ்சி, ஐசக், ரொசாரியோ, சிலுவை, வாத்தி, பவுலுப் பாட்டா, மாமியாக் கிழவி ஆகிய கதை மாந்தர்கள புள்ளிகளாக்கி வரையப்பட்டக் கோலம் தான் இந்த நாவல்.
வாத்தியார் வேலை பார்க்கும் மகன் செபஸ்தி, மேலும் காசு பார்க்கும் ஆசையில, சாயபுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் கடைவைக்க யோசிக்கிறான். இத்தனை நாள் கைகொண்ட தொழிலை விட மனசில்லாதவராகவும், சோற்றுக்கு வழிகாட்டிய வல்லத்தை விற்க மறுப்பவராகவும் அப்பா க்ரூஸ் மிக்கேல்.
மனைவியின் மீதிருக்கும் அன்பு நீறு பூத்த நெருப்பாக வெளிப்படுது. மனைவி மரியம்மைக்கும் வாத்திக்கும் இருக்கும் உறவு தெரிந்திருந்தும் அவளை வெறுத்து ஒதுக்க முடியல. மகனுடன் சென்றால் சீவிச் சிங்காரிக்கவும், உடன்குடித் தேட்டரில் அடிக்கடிப் படம் பார்க்கவும் ஆசைப்படும் அம்மா. தன் இயலாமை, இல்லாமை இரண்டுக்கும் வாய் கொப்பளிக்க வந்து விழும் வார்த்தைகளும் வாத்தியாரும்தான் வடிகால்.அப்படி இருந்தும் மற்றெல்லாக் கதாபாத்திரங்களைவிட முன்நிற்பது பிலோமினாதான்.
அப்பாவிடம் பாசம். அம்மாவிடம் அன்பு. அண்ணன் செபஸ்திடம் பிரியம். சாமிதாசுடன் காதல். ரஞ்சியிடம் தோழமை. வாத்தியிடம் சினேகம். என எல்லாம் கலந்த ஒரு படைப்பு பிலோமி தான்..
தனிமையில் இருக்கும் ஒரு நாள்ல சாமிதாசிடம் தன்னை இழக்கிறாள் பிலோமி. மிக நாசூக்காகவும் அழுத்தமாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்த சம்பவம் கதையின் சிக்கல்கள்ல ஒன்னு. மரியம்மை மறைவு, சாமிதாசின் துரோகம், க்ரூஸின் மனநிலை பிறழ்தல், சிலுவையின் நம்பிக்கைத் துரோகம் எல்லாம் ஒன்றுகூடியோ அல்லது தனித்தனியாகவோ பிலோமியை ஆதரவு தேடி வாத்தி பக்கம் செலுத்துகிறது.
அந்தக் கடல்புரத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் எவ்வளவு பெரிய வீட்டில் பிறந்திருந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய முலையை சப்புவது கிடையாது பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உற்பமான கடல் தண்ணீரை தான் ஊத்துறாங்க…
அந்த தண்ணீர் ஆண் பிள்ளையானால் அவனுக்கு காற்றோடும் அலைகளோடும் போராட உரம் அளிக்கிது. பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் எதிர் படுகிற ஏமாற்றங்களையும் துக்கங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தை கொடுக்குது. அவர்களுடைய வாழ்க்கை காலத்துக்கு காலந்தொட்டு கடலுடன் பின்னிப்பிணைந்து கிடக்குது.
உலகம் முழுவதையும் மனிதன் எனும் ஒரே குடையின் கொண்டுவர நினைப்பதெல்லாம் ஒருபோதும் பலித்து விடாது பகல் கனவுகளாகத்தான் இருக்க முடியும் எதிர்மறையான துணியை கொண்டிருக்கும் இந்த வரியின் அடிநாதமாக ஒரு உண்மை தன்மையும் இருக்கத்தான் செய்து…
-எழில்ஆதித்தமிழன்

Comments
Post a Comment