மனுசி -பாமா

புத்தகத்தின் பெயர் - மனுசி
ஆசிரியர் - பாமா 
பதிப்பகம் -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை - ரூ.266 


ராசாத்திக்கு முப்பது வயது இருக்கும் பொழுது இந்த நாவல் தொடங்குது. திருமணம் பற்றி ஒரு பெண்ணுக்கும் ராசாத்திக்குமான உரையாடலே இந்த நாவலை சுவாரசிய படுத்துது.

இந்த சமுதாயம் தந்த சவால்கள், அவர்கள் கேட்கும் கேள்விகள், இவளின் தனிமை, இவளின் டைரி என்று கதை பயணிக்கிது.

 


வாழ்க்கையை வாழ்ந்துட்டு போறத உட்டுட்டு பொம்பளைனா இப்பிடித்தான் இருக்கணும்,பொம்பளைக்குன்னு இதுதான் நியமிக்கப்பட்ட வாழ்க்கைன்னு பிடிவாதம் பிடிக்குறதுல அர்த்தமே இல்ல... கல்யாணம் பண்ணிக்குறது தான் மனுசப் பிறவியோட லட்சியம்னு நெனச்சிக்கிட்டு இருக்குற சனங்களுக்கான ராசாத்தியின் வரிகள் இது..


திருமணமாகாத பெண்களுக்கு ஆண்களிடமிருந்து பாலியல் ரீதியான சீண்டல்கள் ஒரு பக்கம்னா, பெண்களிடமிருந்து உளவியல் ரீதியான கொடுமைப்படுத்தல்கள் ஒருபுறம்னு இன்னைக்கும் பல ராசாத்திகள் நம் கண்ணெதிரே வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க.

அதேசமயம், திருமணம் செய்து கொண்ட பெண்கள் அனைவரும் சந்தோசமாக இல்லை என்பதையும், உள்ளே ஒரு வேசம், வெளியே ஒரு வேசம் என நடிப்பதிலேயே அவங்களோட காலம் கழியுதுனும் கதை மாந்தர் வழியா ஆசிரியர் சொல்றாங்க..

இந்த நாவலில் ராசாத்தியின் பாட்டி அவளிடம் சொல்றது போல ஒரு பத்தி வரும்,

”தெருவுக்குள்ள போனா நாலு நாய்க நம்மள பார்த்து கொரைக்கும். அதுக்காக அங்ன நின்னு அதுகளப் பாத்து நாமளும் கொரைக்கக் கூடாது. புத்திகெட்ட நாய்க கொரைக்குதுன்னுட்டு  நாம நம்ம வேலையை பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும். இல்லன்னா அங்னக்குள்ளேயே நின்னுகிட்டு இருக்க வேண்டியது தான். போக வேண்டிய எடத்துக்கு போய் சேர முடியாது.”

ஒரு பெண்ணோட உணர்வுகள மிக அழகாகவும்.தெளிவாகவும் ஆசிரியர் விளக்கி இருக்காங்க... இந்த புத்தகத்தை வாசிச்சதுக்கு அப்புறம், இனி கல்யாணம் ஆகாத யாரையும் அது ஆணா இருந்த்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி,நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலனு கேக்கக்கூடாதுனு தான் புரிஞ்சது. 

மனுசனோட உணர்வுகள புரிஞ்சிகிட்டு,யாரையும் காயப்படுத்தாம வாழனும்ங்கிற எண்ணம் இருக்குற ஒவ்வொருத்தரும் படிக்க வேண்டிய புத்தகமா மனுசி இருக்கு... 


                               -எழில் ஆதித்தமிழன்

Comments