பாக்ஸ் -ஷோபாசக்தி


புத்தகத்தின் பெயர்: பாக்ஸ்
ஆசிரியர்: ஷோபாசக்தி 





சிங்களக் கிராமமான மதவாச்சியில் “ஸ்வஸ்திக பண்டார தென்னக்கோன்” என்ற பெரும் செல்வந்தரின் ஒரேயொரு மகனாகப் பிறக்கும் சந்த, அந்தக்கிராமத்தில் இருக்கும் புத்த விகாரைக்கு துறவியாக வருவதற்குப் பெற்றோரால் நேர்ந்து விடப்படுகின்றான். செல்வச்செழிப்பில் வளர்ந்த சந்தவுக்கு மடாலயத்தின் கட்டுப்பாடுகள் குடைச்சல்களை ஏற்படுத்துகின்றன. 

இறுதியில் அங்கிருந்து தப்பி கால் போன போக்கில் சென்று வன்னியில் உள்ள ” பெரிய பள்ளன் குளம் ” என்ற குக்கிராமத்துக்கு வருகின்றான். அங்கு சந்த ,” கார்த்திகை” என்று அந்த மக்களால் அழைக்கப்பட்டு, அவர்களின் செல்லப்பிள்ளையாக பெரிய பள்ளன் குளத்து அணைக்கட்டில் இருந்த ஆதாம் சுவாமியின் கல்லறை வீட்டில் வாழ்ந்து வருகின்றான்.அங்கு அவன் கூடுதலாக “அமையாள் கிழவியின்” அரவணைப்பில் இருந்தான். 

பசிக்கு அந்த கிராம மக்கள் போடும் சோற்றை யாசகமாக பெற்று உண்கின்றான். அவன் அந்த மக்களின் செல்லப்பிள்ளையாக மாற வேண்டிய முக்கிய காரணமாக கார்த்திகை வாய் பேசமுடியாத ஊமையாக இருந்ததே . சிறிய கால ஓட்டங்களின் பின்னர் இலங்கை இராணுவம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பெரிய பள்ளன் குளம் கிராமத்தை பிரகடனப்படுத்தி அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு சொல்கின்றது. அமையாள் கிழவியையும் கார்த்திகையையும் தவிர எல்லோருமே அந்த கிராமத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.
 இராணுவம் இறுதியாக ஆதாம் சுவாமி கல்லறை வீட்டை பெட்டியடித்து சுற்றி வளைத்த பொழுது, கார்த்திகை அந்த ராணுவத்துடன் சிங்களத்தில் உரையாட ஆரம்பித்து தனது பூர்வீகத்தை சொல்கின்றான். குளத்திலே இறந்த அமையாள் கிழவியின் நிர்வாண உடலை துறவிகளுக்குரிய போர்வையைப் போர்த்தி இராணுவ உதவியுடன் சந்த ஸ்வஸ்திக தேரர் அடக்கம் செய்ய செல்வதுடனும், பின்இணைப்பு ஒன்றுடன் பெட்டி நிறைவடைகின்றது ...
   
                              -எழில் ஆதித்தமிழன் 


Comments