என்னுடைய காதலர் தினம்

             என்னுடைய காதலர் தினம்


வீட்டில் இருந்து அவசர அவசரமாக கிளம்பி ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.  செல்போன் மணியடித்தது.பேசிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று வீடியோ பார்த்துக்கொண்டு இருந்தேன். பக்கத்தில் ஒரு 18 வயதுடைய இளைஞர் ஒருவன் வந்து உட்கார்ந்தான். அவனும் அவசர அவசரமாக தனது பையில் இருந்து ஒரு‌ பெரிய சாக்லேட் எடுத்து அதில் எதோ எழுதிக்கொண்டு இருந்தான். பிறகு அதை எடுத்துவைத்து விட்டு பர்சில் இருக்கும் காசை எண்ணி வைத்துக்கொண்டு இருந்தான்.

யாருக்கோ பிறந்தநாள் போல் என்று நினைத்து நான் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். சிறிது நேரம் கழித்து ரயில் வந்தது அதில் ஏறினேன். பையில் இருக்கும் புத்தகத்தை எடுத்து கொஞ்ச தூரம் படித்துக்கொண்டு வந்தேன். இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதால், ரயிலில் இருந்து இறங்கினேன். வழி எங்கும் சாக்லேட் கவர்களும், ரோஜா இதழ்களும் நிறைந்து கிடப்பதை பார்த்து  கடந்து சென்றேன்.

 ரயில் நிலையத்தில் இருக்கும் இருக்கையில் ஒரு  பெண் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். அவளின்  பையில் இருந்து பெரிய சாக்லேட் எடுத்து பிரிக்கும் போது அவளின் உதடுகளில் அவளுக்கே தெரியாமல் ஒரு புன்னகை எட்டிப்பார்த்தது. நான் சாக்லேட்டை எப்போது அலங்கோலமாக தான் பிரிப்பது வழக்கம். ஆனால் அந்த பெண் அப்படி பிரிக்கவில்லை. அவளுக்கும் கை வலிக்காமல் அந்த சாக்லேட் கவரும் கசங்காமல்,அதில் உள் இருக்கும் சாக்லேட்டும் உடையாமல் பிரித்து, சாக்லேட்டில் இருந்து ஒரு பாதியை பிட்டு அவளின் நாக்கின் அடியில் வைத்து சுவைத்து கொண்டிருந்தாள்.


 பிறகு முழுவதையும் சுவைத்து விட்டு அந்த கவரை குப்பைத்தொட்டியில் போடுவது தானே வழக்கம். ஆனால் அவள் தங்கத்தை எப்படி பத்திரப்படுத்தி வைப்போமோ அதேபோல் அந்த கவரை அவளுடைய புத்தக இடுக்குகளில் வைத்தாள். ஏன் இவள் சாக்லேட் கவரை இப்படி பத்திரப்படுத்தி வைக்கிறாள் என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தேன்‌ . ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து பேருந்து நிலையம் பக்கம் சென்றேன்‌. 

அங்கு ஒரு ஆண் ஒரு பெண் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் கண்களால் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார்கள். நம் ஊருக்கு என்ன தான் ஆயிற்று இன்றைக்கு எங்கு பார்த்தாலும், சாக்லேட்களும், அதை பிரியமுடன் உண்ணும் பெண்களும், ரோஜா பூக்களும், அதை பயத்துடன் ஒரு பெண்ணிடம் கொடுக்கும் ஆண்களும், கண்களால் பேசிக்கொள்ளும் ஆண் பெண்களும் ஏன்  எப்போதும் இல்லாமல் இன்றைக்கு இப்படி இருக்கிறார்கள். 

ஒன்றும் விளங்காமல் உடனடியாக என் தோழி ஒருவளுக்கு அழைப்பு விடுத்து , நடந்ததை கூறினேன். அவள் நடந்ததை எல்லா பொறுமையாக கேட்டுக்கொண்டு, “டேய் பொறம்போக்கு நாயே நீ எல்லாம் எதுக்கு டா உய்ரோட இருக்குற.. செத்து தொள எங்க ஆச்சும் “அப்படின்னு திட்டுனா. நான் என்ன இப்படி திட்டுறனு கேட்டேன். பின்ன என்னடா , இன்னைக்கு லவ்வர்ஸ் டே டா அப்படிதான் இருப்பாங்கனு சொன்னா.. 

ஒஹோ அப்படியா சரி சரினு விட்டுட்டேன். நாம என்ன பன்றது நாமளோ அப்பாவி 90ஸ் கிட்ஸ் . நமக்கு இதெல்லாம் புதுசா தான்  இருக்கும் . சரி அலைபேசியை அணைத்து விட்டு, அடுத்த வருடமாவது நமக்கு திருமணம் அல்லது காதலி கிடைத்தால் , நாமளும் இந்த காதலர் தினத்தை கொண்டாடுவோம் என்று அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.. அலுகலம் முடிந்து வீட்டிற்கு சென்றேன் அங்கு அப்பா, அம்மா, தம்பி, தங்கை என எல்லோரும் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

 என்னவென்று கேட்டதற்கு “நீ வந்தா தான நாம ஒன்னா சாப்ட முடியும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்னு சொன்னாங்க... அடடா.. இதுவல்லவா காதல்... அன்று எனக்கு தெரிந்தது இவர்கள் தான் நம் காதலர்கள், இவர்களை தான் நாம் காதல் செய்ய வேண்டும் என்று...


                            -எழில் ஆதித்தமிழன் 

Comments