தூப்புக்காரி
புத்தகத்தின் பெயர்: தூப்புக்காரி
ஆசிரியர்: மலர்வதி
சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் நாம போற வழியில எதோ ஒரு நாத்தம் குடலை புரட்டுறா மாதிரி இருந்தா ஒடனே மூக்கை பொத்திக்கிட்டு, எச்சில பக்கத்துல துப்பிட்டு போய்டுவேன். ரோடு நடுவுல தூர் வாரிட்டு இருக்கும் மக்கள பார்த்து அந்த கழிவோட நாத்தம் இவ்ளோ தூரத்துலயும் இப்படி மோசமா இருக்கே, இத எப்படித்தான் இவ்ளோ பக்கத்துல இருந்து சுத்தம் செய்றாங்களோனு ஆச்சரியப்பட்டு அந்த எடத்தவிட்டு எவ்ளோ சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கிராஸ் பண்ணி போய்டுவேன். இது நான் மட்டும் கிடையாது நாம பல பேர் இப்படி பண்றத தான் வழக்கமா வச்சிட்டு இருக்கோம்.. இல்லனு யாராலயும் மறுக்க முடியாது.
ஆனா, அவங்களோட வாழ்க்கை நெலமை என்ன,அவங்களும் நம்மள மாதிரி மனுசங்க தான, அவங்களுக்கும் அன்பு, பாசம், காதல், இன்பம், துன்பம் இப்படி பல உணர்வுகளயும், அவங்க செய்யும் தொழில் காரணமா அவங்க இழக்குற பொக்கிஷம் எல்லாம் என்னனு ஒரு மலையாள கலந்த நாகர்கோவில் தமிழில அழகா எழுதி இருக்க ஒரு புதையல் தான் இது .
எழுத்தாளர் தகழி எழுதிய “தோட்டியின் மகன்” நாவலோட தொடர்ச்சியா தான் நான் இந்த நாவலை பாக்குறேன். ஆனா, அந்த நாவல் சொல்லாத பல விசயத்த இந்த நாவல் சொல்லுது. உயிருக்கு உயிரா லவ் பண்ணவன கல்யாணம் பண்ணிக்க முடியாமயும், நாம என்ன நெலமையில இருந்தாலும், அத எல்லாம் கண்டுக்காம அரவணைச்சவனை இழந்தும் வாழ்க்கை ஃபுல்லா வலிகளை சுமந்த பூவரசி, ஒரு வலிமையான பெண்ணா உருமாறுறா.
கனகம் , பூவரசி , ரோஸ்லின் , மாரி, மனோ அப்படிங்கிற கதாபாத்திரம் மூலம் தூய்மைப்பணியாளர்களோட துயர வாழ்க்கைய நமளோட மூளைக்குள்ள ஓடவிடுறாங்க. இந்த அஞ்சி பேரும் தான் நம்மள தூங்கவிடாம பண்றது.
நாடார் சாதியைச் சேர்ந்த கனகம் , தன்னோட கணவனோட மருத்துவச்செலவுக்காக ஏற்பட்ட கடனை அடைக்கிறதுக்காக அந்த ஹாஸ்பிட்டல்ல தூய்மை பணியாளரா சேருறதும், கனகத்தின் மருந்து செலவை அடைக்க பூவரசி தூய்மைப்பணியாளரா மாறுறதும்,விளிம்புநிலை மக்களோட துயரத்தை வெளிப்படுத்துது. சக்கிலியான மாரி, பூவரசியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டப்போ வருத்தப்படும் கனகம், அதுக்கு அப்புறம் நம்ம பொன்னுக்கு அவன் தான் துணையா இருப்பான்னு புரிஞ்சிட்டு ஏத்துக்கும்போது எல்லார்விடவும் உயர்ந்து நிக்கிறா கனகம்.
மனோவுக்கும் , பூவாரசிக்கும் இடையே இயல்பா வந்த காதல் இயல்பாவே போய்டுது. அழகா இருக்கும் மனோ மேல வந்த காதலால, மாரி அழுக்கானவனா தெரியுறான். மனோ கைவிட்ட அப்புறம், பூவரசியை ஏத்துக்கும்போது, செயல்ல பேரழகனா உயர்ந்து நிக்கிறான். மனோ -பூவரசி காதல் பிரிஞ்சி போனது. நான் ந்ப்படி பாக்குறேன்னா, காதலை தன்னோட வீட்ல சொல்லமுடியாத கோழையா தான் மனோ இந்த கதையில இருக்கான். காரணம், நாம பூவரசிய தான் காதலிக்கிறோம்னு சொல்லிட்டா, மனோவோட அப்பாவால பூவரசிக்கு எதாவது ஆகிடுமோனு பயம் ஏற்படுது. இத எல்லாம் சேத்து தான் மனோவ ஒரு கோழையா மாத்துது. இரண்டும் பேரும் உயிருக்கு உயிரா காதலிச்சாங்க. ஆனா, இவங்க காதல பிரிச்சது இந்த பாழா போன சூழ்நிலை மட்டும் தான்னு நான் பாக்குறேன்.
அழுக்கான மாரி தான் இந்த நாவலுக்கு புது ரத்த ஓட்டமும், புது வாழ்க்கையும் தரான்.
காதலனால கைவிடப்பட்டு கர்ப்பவதியாகி கலங்கி நிற்கும் பூவரசியோட குழந்தைக்கு அப்பாவ இருக்கேன்னு சொல்லும்போது, ச்ச... இப்படி ஒரு மனுசனானு நெனைக்க தோனுது.. அந்தக் குழந்தையய நல்லா படிக்க வச்சி, இந்த சாக்கடை எல்லாம் சுத்தம் செய்யுற மிஷின கண்டுபுடிக்க வச்சி,நம்மள போல துப்புரவு சனங்களோட இந்த இழிநிலைய போக்கனும்னு நெனைச்சிட்டு இருக்குறது தான் அவனோட அழகான கனவு..
சூப்பர் எப்படியாவது படிக்க வச்சிடுவான் போலனு நெனைக்கும்போது தான், மாரியோட கனவு நெறவேறாமலே ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போறான்...
மாரியோட இறப்பு பூவரசிக்கு நிறைய கஷ்டத்த கொடுத்தாலும், அவனோட தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் கூட அவ வாழ்ந்தா..அவனோட கனவை நினைவாக்கும் விதமா நம்ம பொன்ன வளர்க்கனும்னு வைராக்கியமா இருக்கா..
இந்த நாவல் நமக்குள்ள மறைஞ்சி இருக்க நெறைய விசயத்த வெளிய கொண்டு வருது...
மலர்வதி, இந்த நாவல் மூலமா" துப்புரவுத் தொழிலாளிகள்" என்ற விளிம்புநிலை மக்களோட வாழ்க்கையை மிகச் சிறப்பாக பதிவு செஞ்சி இருக்காங்க... அவங்களோட நலவாழ்விற்கான திட்டத்தை மாரியின் மூலம் நேர்மறையாக பேசுறாங்க...
மலர்வதியின் வார்த்தையிலிருந்து சொல்வதென்றால், " இந்த ஒலகத்தைச் சுத்தப்படுத்துறதுனாலே தானே நீ அழுக்காகி போகிற. சாக்கடையில எறங்கி, எறங்கி நாத்தம் பிடிச்சி போறியே , ஓங்காலில் யாரங்கிலும் இன்னிக்கும் வரைக்கும் விழுந்துருப்பாங்களா மாரி. மதிப்புமிக்க ஒன் பாதங்களை யாராவது தொட்டங்களா. இந்த ஒட்டு மொத்த ஒலகம் சார்பா ஓங்காலில் நான் விழுறேன்னு நினைச்சுக்க. ஒதுக்கி ஒதுக்கி அழுக்கன் அழுக்கன் என புறந்தள்ளி போட்டிருக்கே முழு உலகம் சார்பா ஒங்காலிலே விழுறேன்னு நினைச்சிக்க .." இந்த வார்த்தைங்க துப்புரவு தொழிலாளினு மரியாதை குறைவா நினைக்கிற எல்லாருக்கும் செருப்படி கொடுத்தா மாதிரி இருக்கு..
மலம் அள்ளுதல், சாக்கடை துப்புரவு, மருத்துவமனை கழிவுகள் எல்லாம் கிளீன் பண்றத எல்லாம் இதுவரைக்கும் நாம அருவருப்பா பாத்து இருப்போம்.. அவங்களயும் நமக்கு சமமா நெனைக்க மறந்து இருப்போம்... அவங்க செய்யும் வேல தான் நம்மளயும் நம்ம சுற்றுப்புறத்தையும் சுத்தமா வைக்கிதுனு இந்த நாவல் உணர்த்துது..நமக்கு சரிசமமா நடத்த மனசு வரலனாலும்,அவங்கள இழிவா பேசாமலாவது இருக்கலாம்னு சில சாதி வெறியர்கள் கன்னத்துல அடிச்சா போல சொல்றாங்க.. எழுத்தாளர் மலர்வதியோட பார்வையில் கதையில வரும் எல்லா கதாபாத்திரங்களும் நல்லவங்க தான்.. ஆனா, சூழ்நிலையால் கட்டுப்போட்டு சில நேரம் தவறு செய்றது மாதிரி சித்தரிச்சு இருக்காங்க... இந்த புத்தகத்த படிச்சு முடிச்ச அப்புறம் எனக்கும் இப்படி தான் தோணுச்சு... சூழ்நிலைக்கு தான் எல்லாரும் கட்டுப்பட்டு இருக்காங்கனு...
தூப்புக்காரி.. உங்களை அழவைக்கிறாள் ; சிந்திக்க வைக்கிறாள்; மனதை பக்குவப்படுத்துகிறாள்.
"அவள் தூப்புக்காரி அல்ல;நம் சொந்தக்காரி"
- எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment