நெஞ்சறுப்பு - இமயம்

புத்தகத்தின் பெயர் : நெஞ்சறுப்பு

ஆசிரியர் : இமயம்

பதிப்பகம் : க்ரியா

இரண்டு கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் கருத்தரங்கில் சந்தித்த நட்பில் சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், குறுஞ்செய்தி வழியாக இயல்பாகப் பழகுகிறார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் மேற்கத்தியக் கவிஞர்களின் கவிதைகள், கூற்றுகள், மேற்கோள்கள், வாசித்த பழைய நாவல்கள் மற்றும் கவிதைகள் குறித்த விமர்சனங்கள் நட்பின் தன்மையை மாற்றுகின்றன.

இலக்கிய விமர்சன அறிவு கொண்ட இருவரும் பெரும் வயது இடைவெளிக்கு அப்பால் பழக-காதலிக்க முற்படும்போது பேராசிரியரின் மனைவிக்குத் தெரியவர நடுத்தர வயது உதவிப் பேராசிரியர் எதிர்கொள்ளும் உளவியல் சவால்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.

அந்த இருவரும் கருத்தரங்கில் சந்தித்து உரையாடியது ஒரு மணி நேரம் கூட இருக்காது. கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பப் புரட்சி காதலின் காலம், தொலைவு ஆகியவற்றைக் குறுக்கிவிட்டது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஓர் வலையில் வீழ்த்துகிறது. காதல் எல்லாக் காலங்களிலும் போற்றத்தக்கதாக இருந்தாலும் இன்றைய சமூக-பொருளாதார-பண்பாட்டுக் கட்டமைப்பு அதற்கு சாதகமாக இல்லை. நகர நாகரிகத்தில் சுதந்திரமாகச் சிந்தித்து வாழும் இளம்பெண் உதவிப் பேராசிரியருக்கும்; குடும்ப்ப் பொறுப்பு, சமூக-பொருளாதாரப் பாதுகாப்பின்மை ஆகிய காரணிகளால் அதிகாரப் பின்புலம் இல்லாத, பாடம் சார்ந்த அறிவில் சராசரிக்கும் மேலான சிறந்த ஆய்வுத்திறன் கொண்டு அரசுக் கல்லூரியில் பணியாற்றும் நடுத்தர வயது ஆண் பேராசிரியருக்குமான நட்புதான் நெஞ்சறுப்பு நாவல்.

காதல் என்பது பொதுவாக அறிவு அடிப்படையில் மலர்வது அரிது. இந்த நாவலில் காதலிப்பதாக்க் கட்டமைக்கப்பட்ட இரண்டு ஆங்கில இலக்கியப் பேராசிரியர்களுக்கும் இடையே ஏற்படும் நட்பிற்குக் காரணமாய் இருப்பது இலக்கிய வாசிப்புதான். பல நாவல்கள் படித்த பின்னும் காதலில் சறுக்கலா? என்று கேள்விக்கு விடை காண நாவலை கடைசிப் பக்கம் வரை இடைவிடாமல் படிக்கத் தூண்டுகிறார் இமையம்.

தந்தையை இளம் வயதில் இழந்து, ஏழ்மையிலும் வைராக்கியத்துடன் தனது ஒரே மகனைக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து கௌரவமாக வளர்த்த தாய். மனோதிடம் இல்லாத ஆண் கதாப்பாத்திரம்.


இலக்கிய அறிவுத்திறன் மிக்க இளம் பெண்ணிடம் மனத்தை பறிகொடுத்த ‘காதல்’ குழந்தைகளுக்கும் தெரிந்து குடும்பத்துக்குள் சர்ச்சையாகிவிட்டதால் மன அமைதி கெடுகிறது. அதைத் தன் தவறான காதலை வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்க வழக்கறிஞர், காவல்துறை உயர் அதிகாரி என்று ஒவ்வொருவரிடமும் சென்று ‘பிரச்சனை’ தெருவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தால் தனது தன்மானத்திற்கு ஏற்படும் இழுக்கிலிருந்து தப்பிக்கத் தானாக முன்வந்து முன்ஜாமீன் வரை செல்லும் ‘அறம்’ சார்ந்த வாழ்க்கைப் போராட்டம்தான் இந்த நாவலின் மையக் கரு.

பொருளாதாரத்தில் சமூகத்தில் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டிய அழுத்தத்தில் தனது குடும்ப உறவு-வேர்களுக்கு உதவ இயலாமல் சலிப்பதையும்; வயதான காலத்திலும் மகன் நலனை மட்டுமே பிரதானமாகக் கருதும் தாயையும்; தம்பியின் கௌரவத்திற்காக சகோதரிகளும் தங்களின் இரத்த உறவை மதிக்காத பேராசிரியரின் மனைவியிடம் முரண்படாமல் உறவாடும் ‘நாகரிக மோதல்களை’யும் மிகச் சரியாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது நெஞ்சறுப்பு.

பணிச் சூழலின் காரணமாக கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறும்போது சமூக உறவுகள் அறுபடத் துவங்குவதையும், அதே நகரம் அந்த கிராமத்திலிருந்து அதிக தூரமில்லை என்றாலும் நகரம் எவ்வாறு கிராமத்து மக்களை அந்நியமாக்கிப் புறக்கணிக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்து வைக்கிறார்.

கதையின் களம் ‘காதல்’ என்றாலும் அது யாருக்குச் சாத்தியமாகிறது என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார். திருமணம் குறித்து இருவரும் எந்த இடத்திலும் பேசிக்கொள்வதில்லை. காதலி காதலனைச் சந்திப்பதற்கு வீட்டிற்கும் கல்லூரிக்கும் வருவதாகக் குறுஞ்செய்தி அனுப்பியதும் கதாநாயகனின் மனைவி – கதாநாயகனைக் காட்டிலும் தீவிரமாக யோசிக்க வைக்கும்போது திருமணமாகிக் குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கையைத் தொலைக்கக் கூடாது என்ற நிலையில் கணவனை பாதுகாக்க மனைவி தனது நட்பு வளையத்தைப் பயன்படுத்திப் பிரச்னையைச் சரிசெய்வது பெண் கல்வியின் பயன்பாட்டை உறுதிபடுத்துகிறது.


இதுபோன்ற வயதுக்கு மீறிய ‘காதல்’ தொடர்பைப் பற்றி தினமும் சந்தேகத்துடன் விசாரிக்கும் கேள்விகளால் இயல்பு வாழ்க்கையிலிருந்து மன அழுத்தமான சூழலுக்குத் தனது கணவரை தள்ளியது எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ள விரும்பாத அவருடைய மனைவி காமாட்சிதான். ஆனாலும் அதை அவர் தவறு என்று உணர்ந்து தன்னை சசிகலாவிடம் இருந்து விடுவித்துக்கொள்ள படும்பாடு மனத்தைப் புரட்டி எடுக்கிறது.

வீட்டிற்கும், கல்லூரிக்கும் வருகிறேன் என்று இரு வேறு தருணங்களில் சொல்லிக் கதாநாயகனை சீண்டிப் பரிசோதித்து வராத காதலி; தான் ஒரு நாள் உங்கள் ஊர் ஆற்றங்கரையில் பிணமாகக் கிடப்பேன் என்று வரும் குறுஞ்செய்தி கணவன்-மனைவி இருவரையும் தூக்கமின்றித் தவிக்கவிடும் மனப்போராட்டம் மூச்சடைக்க வைக்கிறது. சசிகலா ஆற்றில் மரணமடைந்தால் தன்னைக் காவல்துறை கைது செய்து நீதிமன்றம் அழைத்துச் செல்லும் காட்சியை, செய்தி ஊடகங்கள் எப்படிச் சித்தரிக்கும்?.

ஊடகம் யாருடைய ரகசியத்தையும் காக்கும் பெட்டகம் அல்ல. சக பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஏற்படும் களங்கங்கள் குறித்து சிந்திக்கும் நேரத்தில் தற்கொலைக்குத் துணியும் விரக்தி மனத்தைக் கலங்க வைக்கிறது. அதேசமயம், ‘பார்த்துக்கொள்ளலாம்’ அப்படி என்ன தவறு செய்துவிட்டோம்? என்று போராடத் துணிச்சலும் மனதுக்குள் மாறிமாறி வந்து போவதுதான் ஒரு சராசரி மனிதனின் ‘மனசாட்சி’ உறுத்தல்.

இலக்கியத்தில் புனிதமாகக் கருதப்படும் ‘காதலைப்’ பல கோணங்களில் கற்பனை வளத்துடன் எழுதும் கவிஞர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள் யாருக்கும் பெரும்பாலும் காதல் வருவதில்லை. ஆனால் அதைப் படித்துவிட்டு அந்தக் கற்பனைக்கு அப்பாற்பட்டுக் கோட்டையைக் கட்டி உயிரூட்ட நினைக்கும்போது எதிர் கொள்ளும் உளவியல் சிக்கலில் ‘சாவதே மேல்’ என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்.

காதல் என்பது உண்மையிலேயே ‘பித்து’ தான் என்று உணர வைக்கிறது நெஞ்சறுப்பு. .

சசிகலாவுக்கும் ஸ்ரீரங்கப் பெருமாளுக்குமான அறுபடாத காதல் என்னவாகிறது என்பதுதான் நெஞ்சறுப்பு. காகிதத்தில் எழுதி வாங்கி காதலைத் தடை செய்தாலும் கைபேசி அலைக்கற்றைகள் அதை அறியவில்லை. இலக்கியத்தால் இணைந்த காதலை இணையத்தளம் என்னும் தொழில்நுட்பம் பின்னிய வலையில் சிக்கித் தவிக்கும் நவீன கலாச்சார மாற்றத்தின் எதிரொலி படிப்பவர்களின் நெஞ்சை நிச்சயம் அறுக்கும் – நெஞ்சறுப்பு.

அதேசமயம், தொழில்நுட்பம் தவறுகளை ஒருபோதும் மறைத்துவைக்கும் சாதனம் அல்ல என்றும் சமூகப் பார்வையுடன் ஓர் எச்சரிக்கையை முன்வைத்து ள்ளார் இமயம் .

                            -எழில் ஆதித்தமிழன் 

Comments