பூக்குழி - பெருமாள் முருகன்
புத்தகத்தின் பெயர்: பூக்குழி
ஆசிரியர்: பெருமாள் முருகன்
பூக்குழி நாவல் - இக்கதையில் புதிதாக எதுவொன்றும் இருந்துவிடவில்லை. பல காலமாக தொடர்ந்துக்கொண்டிருக்கும், பல கதைகளிலும் படைப்புகளிலும் வெளிவந்த அதே கதை தான். ஒவ்வொரு கதையும் அதே அளவு கனத்தை சுமக்கிறது. எதிர்ப்பார்த்த முடிவுதான் என்றாலும் நெஞ்சில் பெரும் பாரத்தை கடத்துகிறது.
எத்தனை பேரை சாதி வெறி காவுக்கொண்டிருக்கும்? சாதிவெறியில் ஊறிப்போன ஒரு கிராமத்தில் பிறந்தாலும் அப்பாவியாகவே இருக்கும் குமரேசனை என்னவென்று சொல்வது? இவ்வளவு காலம் அதே ஊரில் இருந்தாலும், வேறு இனத்தில் பிறந்த சரோஜாவுடன் வாழ விட்டுவிடுவார்கள் என்று நினைத்த அவனது அறியாமையை என்னவென்று சொல்வது?
தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட கொடும் நிகழ்வுகளே இந்த நாவலுக்கு அடித்தளமாக பார்க்கப்படுகிறது. இதனை தர்மபுரி இளவரசனுக்கு சமர்ப்பித்துள்ளார். ஆனால் பூக்குழியில் வரும் நாயகன் குமரேசன் இளவரசன் போல் பட்டியலினத்தை சேர்ந்தவன் அல்ல. திவ்யா போல சரோஜா உயர்சாதியல்ல. இருப்பினும் சாதி மறுத்து திருமணம் செய்து கொள்ளும் கணவன் மனைவியர் சமுதாயத்தில், குடும்பத்தில் மற்றும் உறவுகளில் ஊர்களில் என்னவென்ன கொடுமைகள் சந்திக்க நேரிடும் என்பதையே இந்த நாவல் உணர்த்துகிறது. உண்மையில் இளவரசன் கொல்லப்பட்டது போல நாவலில் சரோஜாவை கொல்ல முயல்கிறார்கள்.
நகரத்தில் சோடாக்கடையில் வேலைக்குச் சென்ற அவனுக்கு, அங்கேயே வளர்ந்த சரோஜாவைப் பிடித்துப்போக, கலியாணம் செய்து அவன் ஊருக்குக் கூட்டிச் செல்கிறான்.
ஊரில் நுழையும்போதே அந்த இடம் அவளுக்கு அந்நியமாக தோன்றுகிறது. ஆசையோடு வளர்த்தப் பெண்ணானாலும் அவளைத் தேடி போகும் ஆவல் அவளின் அப்பாவிற்கும் அண்ணனிற்கும் இருக்கவில்லை. நகரத்தில் வளர்ந்த சரோஜாவிற்கு வீட்டு வேலைகள் எல்லாமே தெரிந்தாலும், கிராம வாழ்வியலும், அவர்களது பேச்சும் புரியாமலே இருந்தது. அவள் வாழ்ந்த சூழல் இது இல்லை. அவள் தின்ற சோறு இங்கு இல்லை. அதை ஏற்றுக்கொள்வதே அவளுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்தது. அதற்குப் பழகிக்கொள்ளவும் சரோஜா தயாராகவே இருந்தாள்.
சிறிது ஏச்சுப்பேச்சுகளுக்குப் பின் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றே குமரேசன் பெரிதும் நம்பினான். ஆனால் அவனின் சொந்தங்களின் உண்மை முகங்கள் அவன் நினைத்தது போல அவ்வளவு இனிமையாக இருந்துவிடவில்லை. அவர்கள் நினைத்தது போல் இருக்கும் வரைக்கும் மட்டுமே அவர்களின் அன்பு பாசம் எல்லாம். அதை மீறினால் அடுத்த கணமே வெட்டிப்போடவும் தயாரவே இருந்தனர். அவமானமும், அடி உதையுமே குமரேசனின் நம்பிக்கைக்குப் பரிசாக கிடைத்தது. சோடாக்கடை வைத்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று அவன் அலைய, தனியே விடப்படும் சரோஜாவை அங்கிருப்பவர்களின் சொற்களே சிறிது சிறிதாய் வதைத்தன.
அவளை உயிருடன் விடமாட்டார்கள் என்று காய்க்காரக் கிழவி எச்சரித்தது பயம் தருவதாகவே இருந்தாலும் அத்தனைக் கொடியவர்களாக அவ்வூர்க்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்றே அசட்டையாக இருந்துவிட்டாள். பல கொடுஞ்சொற்கள் கூறி அவளை துன்பப்படுத்தினாள் குமரேசனின் அம்மா. குமரேசனின் அன்பு ஒன்றே அவளுக்கு ஆறுதல். ஊரிலிருந்து ஒதுக்கி வைத்தாலும், எப்படியேனும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தனர் சரோஜாவும் குமரேசனும். குமரேசனை கலியாணம் செய்துக்கொண்டது தவறோ என்ற எண்ணத்தையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.
இதற்கிடையில் கரு ஒன்று அவளின் வயிற்றில் உதிக்க, வெளியே சொல்லி மகிழ்வை வெளிப்படுத்த முடியாத நிலை. குமரேசன் இல்லாத ஒரு முன்னிரவு பொழுதில் அவளை கொல்லவும் துணிகின்றனர் - காரணம்? அவள் ஊரிலிருப்பது சாமிக்குத் தீட்டு. அவளை வெளியேற்றினால்தான் நோம்பிக்கு பூஜை செய்ய முடியும் என்று அவர்கள் நம்பினர். அவள் யார்? என்ன இனம்? என்று சகலமும் விசாரித்து எடுத்த முடிவு தான் அவளைக் கொல்வது. சிக்கல் இல்லை என்று தெரிந்து எடுத்த முடிவு தான்.
சிக்கல் வந்தாலும் ஊரே சேர்ந்து அப்படி ஒருத்தி இங்கு வரவே இல்லை என்று கூறினால் யாரால் என்ன செய்ய முடியும்? சரோஜா மேல் குமரேசன் ஆசைப்பட்டது அவர்களுக்கு தவறில்லை, அவளை கலியாணம் செய்து மனைவி என்று அங்கீகரிப்பாதே அவர்களுக்கு உறுத்தியது. எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் கடவுள் அவ்வூரில் சரோஜா இருப்பதை மட்டும் தீட்டாக பார்ப்பது அதிசயம் தான்.
- எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment